செய்திகள்

தூத்துக்குடி அருகே இரட்டைக் கொலை

Published On 2017-08-21 11:32 GMT   |   Update On 2017-08-21 11:32 GMT
தூத்துக்குடி அருகே இரட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு நயினார் தெருவை சேர்ந்தவர் ஜெயலிங்கம் (வயது 55). இவர் போல்பேட்டை பகுதியில் மின்மோட்டார், குழாய்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் ஜெயலிங்கத்தை அரிவாளால் வெட்டியது. அந்த சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த டிரைசைக்கிள் தொழிலாளி கே.வி.கே.நகரை சேர்ந்த பாலசுந்தர கணேசன் என்ற பண்டாரம் என்பவர் (56) தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் பாலசுந்தர கணேசனையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் உள்ள ஜெயலிங்கத்தின் தந்தை ஞானாயுதத்துக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அதன்பிறகு ராஜேந்திரனை வீட்டை காலி செய்யுமாறு கூறியபோது, அவர் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டாராம். அதே நேரத்தில் ஜெயலிங்கத்தின் தந்தை தன்னிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக போலி ஆவணம் தயாரித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து வீட்டை காலி செய்ய வலியுறுத்தி ஜெயலிங்கத்தின் தாய் தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராஜேந்திரன் வீட்டை காலி செய்யவும், நிலுவை வாடகைத்தொகையை வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் ராஜேந்திரன் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். இதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் ராஜேந்திரன், அவரது மகன் விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் விக்னேஷ் மீது நெல்லை மாநகரில் பல்வேறு கொலைமுயற்சி, திருட்டு, கொலை மிரட்டல் வழக்குகள் உள்ளன.

அவர் ஜெயிலில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியில் வந்தது தெரியவந்து உள்ளது. இதனால் கூலிப்படையை சேர்ந்தவர்களும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News