செய்திகள்

புதுவை காலாப்பட்டு அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

Published On 2017-08-20 08:28 GMT   |   Update On 2017-08-20 08:28 GMT
புதுவை காலாப்பட்டு அருகே சாலை தடுப்பு கட்டையில் கார் மோதி கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேதராப்பட்டு:

கோவையை சேர்ந்தவர்கள் பிரவீன் (வயது 21), எழில் அமுதன் (21) மற்றும் சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (19), திருப்பூர் பகுதியை சேர்ந்த முகமது முக்தா (21), அரிபிரசாத் (19) மற்றும் விருத்தாசலம் அருகே பெரிய காட்டு முளை பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (20).

இவர்கள் 6 பேரும் கோவையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 6 பேரும் ஒரு காரில் புதுவைக்கு சுற்றுலா வந்தனர்.

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய முதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி புதுவையில் பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்தனர்.

நேற்று காலை இவர்கள் மகாபலிபுரத்துக்கு காரில் சென்றனர். பின்னர் இரவு ஓட்டலுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை விக்னேஸ்வரன் ஓட்டி வந்தார். இரவு 11.30 மணியளவில் காலாப்பட்டு அருகே கீழ்புத்துப்பட்டு- மஞ்சக்குப்பம் இடையே வந்த போது கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில், காரை ஓட்டி வந்த விக்னேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்து போனார். தொடர்ந்து மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News