search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள்"

    • செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது
    • இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.

    அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • பழைய சித்த மருத்துவ விதிகளின்படி குறைந்த பட்சம் இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் இடம் வேண்டும்.
    • கல்லூரி வளர்ச்சிக்கான நிதி வீணடிக்கப்படுவதாகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காக கடந்த 2016-ம் ஆண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இடப் பற்றாக்குறையால் வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பதிலாக அப்போது இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டது. இந்நிலையில் அந்த ஆண்டிலேயே கல்லூரிக்கு கூடுதல் இடத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என்றும், கல்லூரி வளர்ச்சிக்கான நிதி வீணடிக்கப்படுவதாகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி, அரசு சித்த மருத்துவக்கல்லூரியின் எதிர்கால நலனுக்காக தகுதி வாய்ந்த புதிய இடத்தை தேர்வு செய்து விதிகளின்படி புதிய கல்லூரியை உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் சுமார் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது அரசு சார்பில் கல்லூரியின் பாழடைந்த வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களை கட்ட ரூ.40 கோடி அறிவிக்கப்பட்டு ஓராண்டாகியும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்பன உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இன்று 3-வது நாளாக மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    பழைய சித்த மருத்துவ விதிகளின்படி குறைந்த பட்சம் இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் இடம் வேண்டும். ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கும் போது இடப்பற்றாக்குறையால் ஏற்கனவே கட்டிய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட முடிகிறது.

    எனவே கூடுதலாக சித்த மருத்துவ கல்லூரிக்கு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம்.
    • மாணவன் சீருடையில் இருந்துள்ளான்.

    சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ், ரெயில்களில் மீது ஏறி சாகசம் என்ற பெயரில் ஆபத்தான செயலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரித்தும் வழக்குப் பதிவு செய்தும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அபாயகரமான பயணம் அவ்வப்போது தொடர்கிறது.

    உயிரை பொருட்படுத்தாமல் சக பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கும் இது போன்ற சம்பவத்தால் சில நேரங்களில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பும் நேர்ந்து விடுகிறது. பஸ், ரெயில் நிலையங்களில் மாணவர்களின் இத்தகைய செயல்களை போலீசார் கண்காணித்த போதும் திடீரென பயணத்தின் போது பஸ், ரெயில்கள் மீது ஏறி தொங்கி ஆட்டம் போடுகிற சம்பவம் சென்னையில் தொடர் கதையாக நடக்கிறது.

    அந்த வகையில் தற்போது பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பொது மக்களை பதற வைத்துள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரெயிலில் மயிலாப்பூரில் இருந்து ஏறிய பள்ளி மாணவன் ஒருவன் திடீரென பதறவைக்கும் வகையில் ஜன்னலில் தொங்கிய படி பயணம் செய்தார்.

    100 கி.மீ வேகத்திற்கு மேல் சென்ற அந்த ரெயிலில் மாணவன் தன் உயிரை பொருட்படுத்தாமல் ஜன்னல் மீது நின்றும் தொங்கியும் பயணம் செய்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை ஒரு பயணி செல்போனில் படம் எடுத்து அதை வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பல ரெயில்களை கடந்து மாணவன் தொங்கிய படி சாகச செயலில் ஈடுபட்டது. மெய்சிலிர்க்க வைத்தது. சாகச செயலில் ஈடுபட்ட மாணவன் சீருடையில் இருந்துள்ளான். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    விபத்தை உணராமல் சிறிதும் அச்சமின்றி சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட மாணவனின் செயல் சிறிது நேரம் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு அடுத்து என்ன நடக்குமோ? ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தையும், பீதியையும் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியது.

    மாணவர்களின் சாகச நிகழ்ச்சியை படம் பிடித்து வெளியிட்ட பயணி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் ரெயில் பயணத்தில் நடப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இதனை தொடர்ந்து ரெயில் பாதுகாப்பு படை போலீசார் அந்த ரெயில் எண், பயண நேரம், நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

    • பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
    • பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    உடுமலை:

    2022 - 23 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 15 போ் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் இளநிலை பட்ட வகுப்புகளில் மாணவி பாண்டீஸ்வரி புள்ளியியல் துறையில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், அரசியல் அறிவியல் துறையில் மாணவி வேதநாயகி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், மின் வணிகவியல் துறையில் மாணவன் பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    இதுதவிர தாவரவியல் துறையில் மாணவி லிடியா 3-ம் இடத்தையும், கே.ரமணி 10-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி அா்ஸ்மா 7-ம் இடத்தையும், வேதியியல் துறையில் மாணவன் பொன் ஜீவகன் 6-ம் இடத்தையும், தமிழ் துறையில் மாணவி சத்யசுப்ரபானு 10-ம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

    முதுநிலை பட்ட வகுப்புகளில் சுற்றுலாவியல் துறையில் மாணவி ஷாலினி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், மாணவன் பத்மநாதன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், புள்ளியியல் துறையில் மாணவி சந்தியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், வேதியியல் துறையில் மாணவன் கிஷோா் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் வென்றுள்ளனா். பொருளியல் துறையில் மாணவி பி.அபிதா 5-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி கே.அனிஸ் பாத்திமா 10-ம் இடத்தையும் பெற்றுள்ளனா். இந்நிலையில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் கல்யாணி மற்றும் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 21 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 38.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இந்த வாக்காளர் பட்டியலில் 41,067 இளம் வாக்காளர்கள் புதிதாக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். 21 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிக்கும் தகுதியை பெற்று உள்ள 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 1.13 லட்சம் பேர் இருப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களோ குறைவாக உள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கக்கூடிய இளைஞர்கள் பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என தெரிய வருகிறது. முதல் முறை வாக்காளர்கள் பெயரை பதிவு செய்ய ஆர்வம் காட்டாமல் இருப்பதால் அவர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    21 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தகுதி உள்ளவர்கள் கட்டாயம் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    வாக்களிப்பது ஜனநாயக கடமை. கடமையை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் முதன்முறை வாக்காளர்களின் எண்ணிக்கையில் சரிவுக்கான காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த விடுபட்ட வாக்காளர்களை கண்டுபிடிப்பது சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சவாலாக உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

    நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க படிவம் 6, படிவம் 6ஏ, படிவம் 7 அல்லது படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இன்று முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை எந்த நேரத்திலும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் படிவங்கள் கிடைக்கும் என்று மாநகராட்சி கூடுதல் ஆணையர் லலிதா தெரிவித்தார்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.
    • கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல இன்று கல்லூரிக்கு வந்தனர். காலை 10 மணியளவில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒன்று கூடினர். மணிப்பூரில் பெண்கள் மீதான கூட்டு பலாத்கார வன்கொடுமை செய்தவர்களை கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர்
    • 41 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 3-வது இடத்தை பிடித்தது

    நாகர்கோவில், ஜூலை.16-

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கபடி அணி மாணவர்கள் ஆவரைகுளம் தென் ஆவரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர்.41 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 3-வது இடத்தை பிடித்து சுழற் கோப்பையையும். ரூ.10 ஆயிரத்தையும் வென்றனர். பரிசு பெற்ற கல்லூரியின் கபடி அணி வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சபரீஷ் காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரை கல்லூரியின் தலைவர் நீலமார்த்தண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்சி ஜியோ, கல்லூரியின் முதல்வர் ராஜேஷ், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • சுகைல் கைவசம் இருந்த 50 கிராம் கஞ்சாவும், எலக்ட்ரானிக் தராசும் கைப்பற்றப்பட்டது.
    • சுகைலை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம், முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சுகைல் (வயது 28). இவர் நீல வெளிச்சம், சதுரம் உள்பட மலையாள திரைப்படங்களில் துணை கேமராமேனாக பணியாற்றி உள்ளார்.

    இந்த நிலையில் சுகைலின் வீட்டிற்கு நேற்று முன்தினம் கோட்டயம், கலால் பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 220 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுகைல் கைவசம் இருந்த 50 கிராம் கஞ்சாவும், எலக்ட்ரானிக் தராசும் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சுகைலை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியபோது, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும், 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை ரூ.2 ஆயிரத்திற்கு விற்றதும் தெரிய வந்தது.

    • கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜே எஸ் டபிள்யூ ஃபவுண்டேசன் சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 44 கல்லூரி மாணவர்களுக்கு 9,70,602 ரூபாய் மதிப்பில் 2022 -23 ஆண்டிற்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய சேர்மன் ரவி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஜே எஸ் டபிள்யூ பொது மேலாளர் முரளி, மனிதவள மேம்பாட்டு அதிகாரி பழனியப்பன், சிஎஸ்ஆர் பொறுப்பாளர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர் கதிரவன், அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சார்லஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

    • தனியார் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மறியல் செய்தனர்.
    • வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவரை கல்லூரி வரக்கூடாது எனக்கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து 2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்த கல்லூரியில் 2021-22 கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு இதுவரை பருவ தேர்வுகள் நடத்தப்படவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கேட்டு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தேர்வு எழுத அனுமதி கேட்டு கல்லூரி நுழைவு வாயில் முன்புள்ள வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் முத்துமாரி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 5-ந் தேதி கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவரை கல்லூரி வரக்கூடாது எனக்கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

    • மாணவர்களுக்கு, ஆயத்த ஆடை தயாரிப்பு நுட்பங்கள் செயல் விளக்கங்களுடன் கற்பிக்கப்படுகிறது.
    • சாய ஆலைகளுக்கு எடுத்துச்சென்று, வண்ண சாயமேற்றியும், காம்பேக்டிங் மூலம் மெருகேற்றியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் இணைந்து, முதலிபாளையத்தில் நிப்ட்-டீ கல்லூரியை செயல்படுத்துகின்றனர். இக்கல்லூரியில் மாணவர்களுக்கு, ஆயத்த ஆடை தயாரிப்பு நுட்பங்கள் செயல் விளக்கங்களுடன் கற்பிக்கப்படுகிறது. பி.எஸ்.சி., அப்பேரல் பேஷன் மேனேஜ்மென்ட் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் பாடத்தின் ஒரு பகுதியாக, சுயமாக ஆயத்த ஆடை ரகங்கள் தயாரித்துள்ளனர். மாணவ, மாணவிகள் 22 பேர், ஏழு குழுக்களாக பிரிந்து பின்னல் துணியில் டி-சர்ட் தயாரித்துள்ளனர்.நூல் கொள்முதல் செய்து, தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, கல்லூரியில் உள்ள நிட்டிங் மெஷின்களை பயன்படுத்தி, பின்னல் துணி உருவாக்கியுள்ளனர்.

    பிக்யூ, டபுள் பிக்யூ, ஹனி கோம்ப், டுவில், ஜக்கார்டு, பிளீஸ் வித் ரெய்ஸ்டு, பிளைன் இன்டர்லாக் உள்ளிட்ட நிட்டிங் டிசைன்களில் துணி உற்பத்தி செய்து, சாய ஆலைகளுக்கு எடுத்துச்சென்று, வண்ண சாயமேற்றியும், காம்பேக்டிங் மூலம் மெருகேற்றியுள்ளனர். வெவ்வேறு அளவீடுகளில் பின்னல் துணியை வெட்டி, அழகிய டி-சர்ட் தயாரித்துள்ளனர். ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்றுவதுபோலவே, டி-சர்ட்களின் காலர் பகுதியில் அளவீடு லேபிள் மற்றும் ஆடையை கையாளும் விவரங்களுடன் கூடிய வாஷ்கேர் லேபிள் இணைத்து, பாலிபேக்குகளில் அடைத்து பார்வைக்கு வைத்துள்ளனர்.பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் கண்ணன் கூறுகையில், தாங்கள் தயாரித்த ஆடைகளின் அடக்கவிலையை மாணவர்கள் சரியாக நிர்ணயம் செய்துள்ளனர்.

    பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவம் மிக்க மெர்ச்சன்டைசர்களின் கணக்கீட்டின்படி, மொத்த ஆடை தயாரிப்புக்கு ஆகும் செலவின அடிப்படையில், விலையை ஒப்பிட்டு பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் கல்வி கற்கும்போதே ஆடை உற்பத்தி நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதல் குறித்து நன்கு தெரிந்துகொள்கின்றனர். எதிர்காலத்தில் பின்னலாடை உற்பத்தி தொழில்முனைவோராக மாறுவதற்கு இந்த அனுபவம் கைகொடுக்கும் என்றார்.

    • உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் கல்லூரி மாணவர்கள் செய்தனர்.
    • ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளனர,

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். முன்னதாக மருத்துவர் வசந்தகுமார்இரத்த தானம் ஏன் வழங்க வேண்டும், யாரெல்லாம் ரத்த தானம் வழங்கலாம் என்று மாணவர்களுக்கு விளக்கிகூறினார். மேலும் தானம் செய்யும்இரத்தம் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுகிறது. ரத்த தானம் செய்ய மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார்.

    அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறுகையில் , ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளோம். முகம் தெரியாத உயிரை காப்பாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பின்பு மாணவ பிரதிநிதி பாலசுப்பிரமணியன் தலைமையில் 17 யூனிட்ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ×