செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: மதுரையில் முத்தரசன் பேட்டி

Published On 2017-08-16 09:14 GMT   |   Update On 2017-08-16 09:14 GMT
மைனாரிட்டி அரசு என்று அமைச்சரே கூறியிருப்பதால் எடப்பாடி தலைமையிலான அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.
மதுரை:

மதுரையில் இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் மத்திய- மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கை கண்டித்து மதுரை அண்ணாநகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளது.

மத்தியில் உள்ள மோடி அரசும் தமிழக விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்து வருகிறது. தமிழ்நாடு என்றாலே மத்திய அரசுக்கு வேப்பங்காய் போல் கசக்கிறது.

அனைத்து வி‌ஷயங்களிலும் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சியும் மத்திய அரசின் துரோகத்தை தட்டிக்கேட்க தயங்குகிறது.

எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு மைனாரிட்டி அரசு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார். 115 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் இருப்பதாகவும், மெஜாரிட்டிக்கு தேவையான மேலும் 2 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் கொண்டுவர முடியும் என்றும் கூறியிருக்கிறார். பணம் பாதாளம் வரை பாயும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

மைனாரிட்டி அரசு என்று அமைச்சரே கூறியிருப்பதால் எடப்பாடி தலைமையிலான அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது பொறுப்பு கவர்னரை வைத்து சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொடரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News