செய்திகள்

தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2017-08-14 10:17 GMT   |   Update On 2017-08-14 10:17 GMT
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி:

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் தொடர் விடுமுறையையொட்டி மாவட்டத்தின் பிற பகுதிகளில் வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளி நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இன்று கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாளை (15ந்தேதி) 70-வது சுதந்திர தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஊட்டியின் சுற்றுலா தலங்களில் குவிந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் அதிகரிப்பால் சூட்டிங் மட்டம், சேரிங்கிரஸ், லவ்டேல், பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் இனிமையாககளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 4 நாட்கள் தொடர்விடுமுறை காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உள்ளூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்துள்ளனர்.

கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, பாலாஜி கோவில், சின்னக்கல்லார் அணை, நீரார் அணை, சோலையார் அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுதலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான கூழாங்கல் ஆற்று பகுதியில் அதிகளவு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Tags:    

Similar News