செய்திகள்

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது கல்வீச்சு

Published On 2017-08-10 10:09 GMT   |   Update On 2017-08-10 10:09 GMT
மன்னார்குடி அருகே மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது கல் வீசப்பட்டதால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்புத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே வயல் வெளியில் கடந்த 1-ந் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதற்கு மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று 10-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள், பள்ளி மாணவிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த காமாட்சி, விஜி, விஜயா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தகவல் அறிந்ததும் டாஸ்மாக் கடை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். அந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது கல் வீசப்பட்டது. இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. கல் வீசிய ஆண்களை போலீசார் விரட்டியடித்தனர்.

சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட மாஸ்மாக் மண்டல உதவி மேலாளர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் உஷா தேவி, ராஜேந்திரன் ஆகியோர் வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News