செய்திகள்

புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி: பெண் தலைமறைவு

Published On 2017-08-01 10:14 GMT   |   Update On 2017-08-01 10:14 GMT
முதலியார் பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை பட்டம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 27). இவர், சென்னையில் தனியார் கார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் முதலியார் பேட்டை பாரதி மில் திட்டு பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவரது மனைவி செவ்வந்தியிடம் (37). மாத ஏலச்சீட்டு கட்டி வந்தார்.

ஆனால், ஏலச்சீட்டு காலம் முடிந்தும் அதற்கான பணம் ரூ.3 லட்சத்தை ராஜாவுக்கு செவ்வந்தி கொடுக்கவில்லை.

இதுகுறித்து பல முறை ராஜா சென்று கேட்ட போது பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில் செவ்வந்தி திடீரென மாயமானார். இதையடுத்து விசாரித்த போது, ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்து செவ்வந்தி தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து ராஜா முதலியார் பேட்டை போலீசில் ஏலச்சீட்டு பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து செவ்வந்தி மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சுமார் ரூ.40 லட்சம் வரை செவ்வந்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே செவ்வந்தியின் கணவர் வடிவேலு போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளார். அவரிடம் தலைமறைவாக உள்ள செவ்வந்தி குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News