செய்திகள்

தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்போம்: என்.ஆர்.தனபாலன்

Published On 2017-07-24 10:27 GMT   |   Update On 2017-07-24 10:27 GMT
நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரி தி.மு.க. தலைமையில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் கலந்து கொள்ளும் என என்.ஆர்.தனபாலன் அறிவித்துள்ளார்.
சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நீட் நுழைவு தேர்வுக்கு விலக்கு அளிக்காமல் மத்திய அரசு தமிழக மாணவர்களை வஞ்சித்து வருகிறது. அதே போன்று தமிழக அரசும் தேவையான அழுத்தம் கொடுக்காமல் தமிழக மாணவர்களின் வாழ்வாதாரங்களை பாழாக்கி விட்டது.

எனவே, நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரி தி.மு.க. தலைமையில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் கலந்து கொள்ளும்.

இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக தலைமை செயலாளர் அலுவலகத்திற்குள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்கள் கைப்பற்றியதும் தமிழக வரலாற்றில் நடந்திராத தலைகுனிவாகும். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ரூ.90 கோடி வாக் காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கு முதல்- அமைச்சர் உள்பட ஏழு அமைச்சர்கள் பணம் கொடுத்தது அம்பலத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்தது வருமான வரித்துறை சோதனை மூலம் அம்பலமாகியுள்ளது.

இவற்றையெல்லாம் மிஞ்சுகிற வகையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா சுதந்திரமாக இருக்க ஜெயில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்திருப்பது அம்பலமாகி இன்று தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.

இதுபோன்ற அவலங்களும், தலைகுனிவும் தொடராமல் இருக்க வேண்டுமாயின் தமிழகத்தில் முழுமையான ஆட்சி மாற்றமே தீர்வாக இருக்கும்.

இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News