செய்திகள்

‘டெஸ்ட் டியூப்’ மூலம் கர்ப்பம்: பிரசவ ஆபரே‌ஷனில் தாய்-2 குழந்தைகள் பலி

Published On 2017-07-24 10:19 GMT   |   Update On 2017-07-24 10:19 GMT
டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு பிரசவ ஆபரே‌ஷனில் மாரடைப்பு ஏற்பட்டு தாய்-2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை முத்தரையர்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரி.

இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. குழந்தை உருவாவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. எனவே ‘டெஸ்ட் டியூப்’ மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

விக்னேசின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். அங்குள்ள ஆஸ்பத்திரியில் இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திவ்யா கர்ப்பமானார். 2 குழந்தைகள் கரு உருவாகி இருந்தது. பின்னர் அவர் புதுவைக்கு அழைத்து வரப்பட்டார்.

புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சைகளை பெற்று வந்தனர். நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே காமராஜர் சாலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அவர்கள் குழந்தைகளை ஆபரே‌ஷன் செய்து எடுக்க வேண்டும் என்று கூறி இ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வைத்து அவருக்கு ஆபரே‌ஷன் நடந்தது. அப்போது திவ்யாவும், வயிற்றில் உள்ள 2 குழந்தைகளும் இறந்துவிட்டன. ஆபரே‌ஷனின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு திவ்யா மற்றும் குழந்தைகளும் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது.

ஆனால் தவறான சிகிச்சை அளித்தன் காரணமாகத்தான் அவர்கள் இறந்துவிட்டதாக கூறி உறவினர்களும், மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்களும் இன்று அந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசேகரன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் போராட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றனர்.

இது சம்மந்தமாக லாஸ்பேட்டை போலீசிலும் புகார் கூறப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News