செய்திகள்

நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்: கே.பி.அன்பழகன் பேட்டி

Published On 2017-07-23 12:02 GMT   |   Update On 2017-07-23 12:02 GMT
நீட் தேர்வு மற்றும் என்ஜினீயரிங் தொடர்பான நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டாம் என தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று கே.பி. அன்பழகன் கூறினார்.

தர்மபுரி:

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் அகில இந்திய அளவில் 24.5 சதவீதமாகும். ஆனால் தமிழ்நாடு 44.3 சதவீதமாக இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு 967 புதிய பாடபிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அந்த பகுதிகளில் உள்ள அரசு கல்லூரிகளில் வந்துள்ள விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த கூடுதல் பாட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, காரிமங்கலம், பென்னாகரம், கிருஷ்ணகிரி ஆகிய அரசு கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப நடவடிக்கையை நாளையில் இருந்தே தொடங்குகின்றனர். அதுபோல் தர்மபுரி மாவட்டம் பாலகோட்டில் அரசு இருபாலர் கல்லூரி இந்த ஆண்டு முதலே தொடங்கப்பட உள்ளது.

நீட் தேர்வு மற்றும் என்ஜினீயரிங் தொடர்பான நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டாம் என தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.


தமிழக அரசு எப்போதுமே போராடி தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறது. முதல்வர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அழுத்தம் கொடுத்து வருகிறார். அ.தி.மு.க.வை எந்த ஒரு இயக்கமும் நிர்பந்திக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News