செய்திகள்

டி.ஜி.பி. பணி நீட்டிப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published On 2017-07-17 11:31 GMT   |   Update On 2017-07-17 11:31 GMT
டி.ஜி.பி. பணி நீட்டிப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மதுரை:

தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் பதவி காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்து கடந்த 30-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், குட்கா, பான்பராக் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அதன் விற்பனையை அனுமதித்ததாக டி.ஜி.பி. ராஜேந்திரன் மீது புகார் உள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி இருப்பது சட்டவிரோதம். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பணி நீட்டிப்பு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசின் தலைமை செயலாளரும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினரும் தாக்கல் செய்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணை 17-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று வழக்கு விசாரணை நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி. சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘குட்கா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது தொடர்பான புகார் கடந்த 2016-ம் ஆண்டு கூறப்பட்டது. அந்த நேரம் டி.கே.ராஜேந்திரன் சென்னை மாநகர கமி‌ஷனராக இருந்தார்.


குட்கா நிறுவன ஆய்வின் போது ஒரு டைரி சிக்கியது. அதில், ராஜேந்திரன் என்பவருக்கு ரூ. 16 லட்சம் செலவுக்காக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை வைத்து இவருக்கு தான் (டி.கே. ராஜேந்திரன்) வழங்கப்பட்டது என பொத்தாம் பொதுவாக கூறமுடியாது.

குட்கா நிறுவன மேலாளர் ஒருவர் பெயரும், இடைத்தரகர் ஒருவர் பெயரும் ராஜேந்திரன் தான் என கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் டி.ஜி.பி. மீதான புகாரை உறுதியாக கூற முடியாது. விசாரணையின் இறுதியில் தான் முடிவு தெரியவரும். மனுதாரர் நம்பகத்தன்மை இல்லாத குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

மேலும் வருமான வரி புகாருக்கும், பணி நீட்டிப்பு உத்தரவுக்கும் தொடர்பு இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்‘ என்றார்.

மனுதாரர் வக்கீல் கண்ணன் கூறுகையில், குற்றச்சாட்டு உண்மையானது. டி.ஜி.பி. பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News