செய்திகள்

நாளை ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு 72 சதவீத வாக்கு கிடைக்கும்

Published On 2017-07-16 06:35 GMT   |   Update On 2017-07-16 06:35 GMT
ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் கட்சிகளின் பலம் அடிப்படையில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு 72 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
சென்னை:

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநிலங்களில் சட்டசபை வளாகத்திலும் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கிறார்கள்.

காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை சட்டப் பேரவைச் செயலகம் மேற்கொண்டுள்ளது. இவற்றை டெல்லி சிறப்பு பார்வையாளர் ஹன்ஸ் பிரகாஷ் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் அலுவலர் வழங்கும் பேனாவால் மட்டுமே வாக்குச் சீட்டில் தங்களது விருப்ப வரிசைக் குறியீட்டை செய்ய வேண்டும். வேறு பேனாவை பயன்படுத்தினால் செல்லாததாகி விடும் என்பன உள்பட 10 அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் 232 பேர், கேரள எம்.எல்.ஏ. அப்துல்லா, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஓட்டுப் போடுகிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதால் 232 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடுகிறார்கள்.

மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்குப் பதிவு கணக்கிடப்படும். அதன்படி 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சத்து, 99 ஆயிரத்து 170 ஆகும். இதனால் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்குப்பதிவு 176.82 ஆகும்.

பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க. இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 122 எம்.எல்.ஏ.க்கள், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்கிறார்கள்.

தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

எனவே கட்சிகளின் பலம் அடிப்படையில் ராம்நாத் கோவிந்த்துக்கு 72 சதவீத வாக்குகள் கிடைக்கும். அவருக்கு மொத்தம் 56,808 வாக்குகள் கிடைக்கும். மீரா குமாருக்கு 22,028 வாக்குகளே கிடைக்கும்.

அ.தி.மு.க. அணியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி மட்டும் மாட்டிறைச்சி பிரச்சினையால் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட மாட்டேன் என்று அறிவித்துள்ளதால் அவரது ஓட்டு ராம்நாத் கோவிந்துக்கு கிடைக்காது.

பா.ம.க. எம்.பி. அன்புமணி டெல்லியில் ஓட்டு போடுகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு ரகசியமாக காக்கப்படுகிறது. எனவே இதில் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் 20-ந்தேதி (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
Tags:    

Similar News