செய்திகள்

தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2017-06-26 16:35 GMT   |   Update On 2017-06-26 16:35 GMT
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங்மட்டம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இதனால் கோடை சீசன் காலங்களில் ஊட்டியில் உள்ள எந்த சுற்றுலா தலங்களை பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதன் பின்னர் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாலும், பள்ளிக்கூடங்கள் திறந்ததாலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அங்குள்ள இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை, ஜப்பான் கார்டன் போன்றவற்றில் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டியில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குடைப்பிடித்தபடியும், கம்பளி ஆடை அணிந்தபடியும் பூங்காவை கண்டுகளித்தனர்.

ஊட்டி படகு இல்லத்திற்கு நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அங்கு உள்ள துடுப்பு படகு, மிதி படகு மற்றும் மோட்டார் படகில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

இது தவிர ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், தேனிலவு படகு இல்லம், ஊட்டி–கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்ததால் ஊட்டியில் நேற்று தாவரவியல் பூங்கா, பஸ் நிலையம், படகு இல்லம் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Tags:    

Similar News