செய்திகள்

சென்னை அழைத்துவரப்பட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்: இன்று கொல்கத்தா கொண்டு செல்லப்படுகிறார்

Published On 2017-06-20 19:35 GMT   |   Update On 2017-06-20 19:35 GMT
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துவரப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துவரப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியதை தொடர்ந்து அங்கிருந்து அவர் மாற்றப்பட்டார். கொல்கத்தா நீதிபதியாக நியமிக்கப்பட்ட கர்ணன் அதன் பிறகும் நீதிபதிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே இருந்தார். இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கர்ணன் மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட 7 நீதிபதிகளுக்கு எதிராக, நீதிபதி கர்ணன் கைது உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பினார். சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் அறை எடுத்து தங்கிய கர்ணனை கைது செய்வதற்காக மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜ்கனோஜியா தலைமையில் அம்மாநில போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். அதற்குள் நீதிபதி கர்ணன் விருந்தினர் இல்லத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

பின்னர் அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையே அவருடைய பதவிக் காலம் முடிவடைந்தது. இதனால் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கர்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள மலுமிச்சம்பட்டியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று மாலை போலீசார் மலுமிச்சம்பட்டி சென்று கர்ணனை கைது செய்தனர். நள்ளிரவு சென்னை அழைத்துவரப்பட்ட அவர் விமானநிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்று 11 மணியளவில் அவர் கொல்கத்தா கொண்டு செல்லப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News