செய்திகள்

கவர்னர் கிரண்பேடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நாராயணசாமி ஆவேசம்

Published On 2017-06-14 07:30 GMT   |   Update On 2017-06-14 07:30 GMT
புதுவை மக்களையும், மாணவர்களையும் திசை திருப்பி கலப்படமற்ற பொய்யை கூறிய கவர்னர் கிரண்பேடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

உயர் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் தலையிட்டதால் இந்த மோதல் மேலும் அதிகரித்தது.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி இது சம்பந்தமாக ஜனாதிபதி, உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து புகார் கூறினார்.

இதற்கு பதிலடியாக கவர்னர் கிரண்பேடியும் டெல்லி சென்று ஜனாதிபதி, பிரதமரிடம் நாராயணசாமி குறித்து புகார் கூறினார்.

இந்த நிலையில் புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசியதாவது:-

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் சிலர் திட்டமிட்டு அரசை குற்றம்சாட்டி சதி வேலையில் இறங்கியுள்ளனர். இதனால் இதுதொடர்பான முழுமையான அறிக்கையை சபையில் தாக்கல் செய்கிறேன்.

தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம், பட்டயப்படிப்பிற்கான 50 சதவீத ஒதுக்கீட்டை புதுவை அரசு பெற்றது.

தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடு கிடையாது. புதுவை அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை, கலந்தாய்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நடத்தப்பட்டது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற 613 மாணவர்களில் புதுவை ஒதுக்கீடான 162 இடங்களுக்கு 267 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் அரசு நடத்திய 2 கலந்தாய்விலும் பங்கேற்றனர்.

மாணவர் சேர்க்கை தரவரிசை, ஒதுக்கீடு, ரோஸ்டர் பட்டியல் ஆகியவை சென்டாக் இணையதளத்தில் மே 1-ந்தேதி கலந்தாய்வுக்கு பல நாட்கள் முன்பாகவே வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு அரசு ஒதுக்கீட்டில் முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

கடந்த 30-ந்தேதி சென்டாக் நடைபெறும் இடத்திற்கு கவர்னர் நேரில் சென்றபோது எங்கள் அரசின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.


அரசு 71 இடங்களை தனியார் கல்லூரிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக பொய்யான தகவல்களை கூறியுள்ளார். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளார்கள். நான் தலையிட்டு சரி செய்தேன் என கூறியுள்ளார்.

கவர்னர் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? என சவால் விடுகிறேன். புதுவை மக்களையும், மாணவர்களையும் திசை திருப்பி கலப்படமற்ற பொய்யை கூறிய கவர்னர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதுபோன்று உண்மைக்கு புறம்பாக மக்களை திசைதிருப்பும் கவர்னரின் செயல்பாடுகளை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் முன்வைக்கிறேன்.

கடந்த 31-ந்தேதி கவர்னர் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கான கட்டண விகிதம் ரூ.5.50 லட்சம் மட்டுமே என அறிவித்தார். நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ரூ.5.50 லட்சத்திற்கு பட்ட மேற்படிப்பு இடங்கள் வாங்கித்தருகிறேன் என்றும் கூறினார். இதை நம்பி 22 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

ஆனால், இன்று அந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது கவர்னர் மருத்துவ கவுன்சில் கட்டணத்தை நிர்ணயிக்கும் என்று கூறியுள்ளார். முன்னுக்கு பின் முரணாக கவர்னர் பேசியுள்ளார்.

சென்டாக்கின் 2 கலந்தாய்வு முடிந்த பின்னர் 3-வதாக 31-ந்தேதி கவர்னர் கலந்தாய்வு நடத்தினார். இது இந்திய மருத்துவ கவுன்சில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பானது. இந்த அதிகாரத்தை கவர்னருக்கு யார் வழங்கியது? மாணவர்களின் நலன் கருதி வெளிப்படையாக அனைத்து விதிகளும் கடைபிடிக்கப்பட்டு மத்திய அரசின் உத்தரவுகள் பின்பற்றப்பட்டு சென்டாக் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

புதுவை வரலாற்றில் முதல் முறையாக அரசு ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இந்த அரசால் பெறப்பட்டது. இடஒதுக்கீட்டு கொள்கைப்படி சரியாக நிரப்பப்பட்டது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டணக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News