செய்திகள்
நா.காமராசன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த சினிமா பாடல் ஆசிரியர் நா.காமராசன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published On 2017-05-25 10:14 GMT   |   Update On 2017-05-25 10:14 GMT
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறைந்த சினிமா பாடல் ஆசிரியர் நா.காமராசன் உடலுக்கு இன்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:

எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் உள்பட பல்வேறு பிரபல நாயகர்கள் நடித்த படங்களுக்கு 600க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியவர் நா.காமராசன் (75).

கடந்த சில மாதங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்த நா.காமராசன் நேற்று இரவு 9 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

நா.காமராசன் உடலுக்கு கவிஞர் வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், பழனிபாரதி மற்றும் திரை உலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறைந்த சினிமா பாடல் ஆசிரியர் நா.காமராசன் உடலுக்கு இன்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கவிஞர் காமராசன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறேன். காமராசன் மொழிப் போராட்டத்தின் போது பல்வேறு தியாகங்களை செய்தவர்.

குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தின் போது, அவர் கைது செய்யப்பட்டு, கால்களில் விலங்கிட்டு, சிறையில் அடைப்பட்டிருந்த நினைவுகள் எல்லாம் நமது நெஞ்சங்களில் நிழலாடுகின்றன. அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் - உறவினர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், குறிப்பாக தலைவர் கலைஞர் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் நா. காமராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நா.காமராசன் உடல் தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது.
Tags:    

Similar News