செய்திகள்

ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ. 10 லட்சம் மோசடி

Published On 2017-05-24 08:59 GMT   |   Update On 2017-05-24 08:59 GMT
கடையநல்லூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:

கடையநல்லுர் பஜார் வீதியை சேர்ந்தவர் அலி. இவரது மகள் பாத்திமா (வயது 28). பட்டதாரியான இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனக்கு ஆசிரியை வேலை வாங்கி தருமாறு அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (62) என்பவரின் உதவியை நாடினார். அப்போது பாத்திமா சர்புதீனிடம் ரூ. 10 லட்சம் கொடுத்தாராம். ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் சர்புதீன் பாத்திமாவுக்கு வேலை வாங்கி கொடுக்க வில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத்திமா சர்புதீனிடம் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது சர்புதீன், பாத்திமாவை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாத்திமா கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை தாமதமானதால் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் கடையநல்லூர் போலீசார் பட்டதாரி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட சர்புதீன் மீது கொலைமிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்புதீனின் தந்தை மஜித் காமராஜர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News