செய்திகள்

தஞ்சை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொது மக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2017-05-23 16:49 GMT   |   Update On 2017-05-23 16:49 GMT
தஞ்சை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுபானக்கடைகளை அகற்றினர். அதற்கு பதிலாக வேறு இடங்களில் புதிதாக மதுபானக் கடைகளை அமைத்து வருகின்றனர். இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சையை அடுத்த நெய்தலூரில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

நெய்தலூர் அதை சுற்றியுள்ள உதாரமங்கலம், தாளக்குடி, கொத்தந்குடி, திட்டை, வெண்ணக்குடி, குண்டூர், சாலக்குடி, கொண்டாவட்டதடல், எடக்குடி, மெலட்டூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மெலட்டூர் மற்றும் நெய்தலூரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அருகே அரசு பள்ளிகள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் உள்ளன.

மேலும் பொது மக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர். இந்த கடை இருப்பதால் அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. மேலும் குடித்து விட்டு குடிமகன்கள் பொது மக்களுக்கு இடையூறாக செயல் படுகின்றனர். எனவே கடையை அகற்ற வேண்டும் என்று இன்று காலை அப்பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, கடையின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

இங்கு மதுபானக்கடை இருப்பதால் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து மது அருந்துகின்றனர். கடந்த 8 மாதத்திற்கு முன்பு இந்த கடை அருகே உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் வாலிபர்கள் மது குடித்து விட்டு போதையில் படுத்திருந்தனர். அப்போது ஒருவர் தவறி கிணற்றில் விழுந்து இறந்தார். இதனால் இப்பகுதியில் கடை இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மெலட்டூர் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடையை அப்புறப்படுத்தும் வரை நாங்கள் இங்கு இருந்து செல்லமாட்டோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News