செய்திகள்

சட்டம்-ஒழுங்குக்கு எதிராக உள்ள ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த போலீசுக்கு அனுமதி: நாராயணசாமி

Published On 2017-05-22 11:51 GMT   |   Update On 2017-05-22 11:51 GMT
சட்டம்-ஒழுங்குக்கு எதிராக உள்ள ரவுடிகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த போலீசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சரக்கு மற்றும் சேவை வரியின் முக்கியமான கூட்டம் ஸ்ரீநகரில் கடந்த 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பது சம்பந்தமாக முடிவு செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மாநில நிதி அமைச்சர்களை அழைத்து பேசினார்.

4 விதமான வரி விதிப்பு, பொருட்களின் தன்மை குறித்து வரி விதிப்பது என்று முடிவு செய்ததின் அடிப்படையில், மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களுக்கு எந்தவித வரியும் இல்லை என முடிவு செய்யப்பட்டது. அதில் நாட்டில் உள்ள மக்கள் பயன்படுத்துகின்ற 50 சதவீத பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீதத்தில் பொருட்களில் தரம் பிரித்து சாதாரண மக்கள், நடுத்தர மக்கள், மேல் தட்டில் இருக்கிற மக்கள் என தரம்பிரித்து அவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் கட்டுகிறவர்கள் சேவை வரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சேவை வரியின் முழு வரியையும் கடந்த காலங்களில் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. இப்போது சேவை வரி சமமாக பிரிக்கப்பட்டு மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவைக்கு அனுகூலம் கிடைக்கும்.

சேவை வரியில் மத்திய அரசின் ஒப்புதல் படி 50 சதவீதம் வரி நமக்கு கிடைக்கிறது. குளிர்சாதன வசதி இல்லாத ஓட்டல்களுக்கு 12 சதவீத வரியை குறைத்து 5 சதவீதமாக மாற்றியுள்ளோம். பெரிய ஓட்டல்கள் 12 சதவீதம், 5 நட்சத்திரம் ஓட்டல்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கும், பெட்ரோலிய பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு மாநில அரசுகளே வரி விதிக்கலாம் என கூறியுள்ளது.

ஜூலை மாதம் 1-ந்தேதி புதிய நிலைக்கு மாறும் நிலையில் புதுவை மாநிலம் தயாராக உள்ளது. முதன் முறையாக புதுவை மாநிலத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரியில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. 3-ல் இரண்டு பங்கு மாநிலங்கள் சேர்ந்து சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று சொன்னால் அதை மாற்றியமைக்க மத்திய அரசு முயற்சிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் தொடர்ந்து சில கொலைகள் நடைபெற்று வருகின்றது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து கொலை செய்தவர்களை கைது செய்வது மட்டுமல்லாமல் துரிதமாக நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளோம்.

தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளுடன் பேசி சுற்றுலா பயணிகள் அதிகமாக புதுவைக்கு வருகின்ற காரணத்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். காவல்துறையில் ஒருசில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றது. அவர்களை களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காவல்துறை பொறுப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு காவல்துறையை சேர்ந்தவர் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவரை பதவி நீக்கம் செய்துள்ளோம். எங்களது அரசை பொருத்தவரை புதுவை மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது எங்கள் கடமை. அதற்காக காவல்துறைக்கு சுதந்திரம் கொடுத்துள்ளோம்.

காவல் துறையில் சிலர் கையூட்டு பெற்று வருகின்றனர். அதை முற்றிலுமாக ஒழிப்போம். காவல்துறையானது முனைந்து செயல்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்குக்கு எதிராக உள்ள ரவுடிகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேவைப்பட்டால் காவல்துறையினர் அவர்களின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சட்டத்திற்கு உட்பட்டு பயன்படுத்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News