செய்திகள்

சசிகலா கணவர் நடராஜன் மீதான சொகுசு கார் வழக்கு: பிப். 27-ல் இறுதி விசாரணை

Published On 2017-02-20 10:04 GMT   |   Update On 2017-02-20 10:04 GMT
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் மீதான சொகுசு கார் வழக்கில், பிப்ரவரி 27-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை:

அதிமுக பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன், லண்டனில் இருந்து,'லெக்சஸ்' என்ற சொகுசு காரை, கடந்த 1994-ஆம் ஆண்டு இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், அதே ஆண்டில் அதவாது 1994-ஆம் ஆண்டில் வெளியான புதிய ரக கார் என தெரிய வந்தது. எனவே, வரி ஏய்ப்பு மூலம், சுமார் ரூ.1 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, நடராஜன், அவரது உறவினர் வி.என்.பாஸ்கரன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துரையினர் தனித் தனியாக விசாரித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு, பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், நடராஜன் உட்பட நான்கு பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

நீதிபதி தனது தீர்ப்பில், வெளிநாட்டு கார் இறக்குமதி வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.நடராஜன், வி.என். பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜரிதா சுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் மீதும் கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இவை சந்தேகத்துக்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு, 5-வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. சிபிஐ தரப்பிலும், விரைந்து விசாரிக்க
கோரி மனுக்களும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி பாஸ்கரன் முன்னிலையில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனை உறுதிபடுத்தப்பட்டு சசிகலா தற்போது சிறையில் உள்ள நிலையில், நடராஜன் மீதான சொகுசு கார் வழக்கு இறுதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News