செய்திகள்

பள்ளி வேன் தீப்பிடித்தது: மாணவ–மாணவிகள் உயிர்தப்பினர்

Published On 2016-11-05 17:45 GMT   |   Update On 2016-11-05 17:45 GMT
கரூர் அருகே பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ–மாணவிகள் காயம் இன்றி உயிர் தப்பினர்.
கரூரில் ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான பள்ளி கோதை நகர் அருகே உள்ளது. இந்த பள்ளியில் கரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி முடிந்து நேற்று பகல் 3 மணி அளவில் 10–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஆத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது. வேனை தாந்தோன்றிமலையை சேர்ந்த மணிகண்டன்(வயது 25) ஓட்டி சென்றார். அப்போது திடீரென்று வேனில் உள்ள பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு, அதில் இருந்து குபு,குபு என்று புகை வரத்தொடங்கியது.

இதைத்தொடர்ந்து டிரைவர் சாமர்த்தியமாக அருகில் வீடுகள் இல்லாத ஒரு சந்தில் வேனை நிறுத்தி அவசர அவசரமாக மாணவ–மாணவிகளை கீழே இறக்கி விட்டு அவரும் இறங்கினார். அப்போது வேன் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து மணிகண்டன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுமையாக எரிந்து நாசம் ஆனது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவ– மாணவிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News