செய்திகள்
கனிமொழி எம்பி

அதிமுக-பா.ஜனதாவுக்கு தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள்- கனிமொழி எம்பி பேச்சு

Published On 2021-04-01 09:43 GMT   |   Update On 2021-04-01 09:43 GMT
மத்தியில் ஆளக்கூடிய பா.ஜனதா அரசாங்கம் மாநிலத்திலுள்ள அ.தி.மு. க.வை பினாமி அரசாக செயல்படுத்தி வருகிறது என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.

பரமக்குடி:

பரமக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முருகேசனை ஆதரித்து கனிமொழி எம்.பி பரமக்குடியில் உள்ள எமனேசுவரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வெளி மாநிலத்தவர் தமிழகத்தில் வந்து வேலை பார்ப்பதை தற்போது ஆளக்கூடிய அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறுகிற தேர்தலுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வருகிறது.

தமிழ்நாட்டில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என பா.ஜனதா அரசு செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி, அடிமை அமைச்சர்களை வைத்து கொண்டு பா.ஜனதா தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இது பேரறிஞர் அண்ணாவின் மண், கலைஞரின் மண், பெரியாரின் மண் யாராலும் தொட்டு பார்க்க கூட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


மத்தியில் ஆளக்கூடிய பா.ஜனதா அரசாங்கம் மாநிலத்திலுள்ள அ.தி.மு. க.வை பினாமி அரசாக செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கு சரியான பாடம் தமிழக மக்கள் புகுத்த வேண்டும். தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும்.

புதிய மின் திட்டத்திற்கு டெல்லியில் போய் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு கொடுக்கக்கூடிய இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு கொடுக்க கூடிய இலவச மின்சாரம் இனி கொடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவோம்.

நெசவாளர்களுக்கு கொடுக்கக்கூடிய 200 யூனிட் மின்சாரம் 300 யூனிட் ஆக உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களின் நூல் விலை தினந்தோறும் ஏற்றம் இறக்கமாக கிடைக்கிறது. அதை சீராக கிடைக்க தி.மு.க பாடுபடும். நெசவாளர்களுக்கு என்று தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்.

இது மட்டுமின்றி விவசாயக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதேபோல் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். 5 சவரனுக்கு குறைவாக வைத்திருக்க கூடிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.5000 வழங்க சொன்னார் மு.க.ஸ்டாலின். ஆனால் தமிழகத்தில் ஆளக் கூடிய அ.தி.மு.க. அரசு ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கியது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மீதி ரூ.4 ஆயிரம் தமிழக மக்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்கும் தலா ஆயிரம் ரூபாய் மாதந் தோறும் வழங்கப்படும்.

முதியோர் உதவித் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி தரப்படும். இதையெல்லாம் நாங்கள் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டுமென்றால் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தி.முக. கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News