செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதிக்கு டிக்கெட் கிடைத்தது கட்சி முடிவு- துர்கா ஸ்டாலின் பேட்டி

Published On 2021-03-28 10:49 GMT   |   Update On 2021-03-28 10:49 GMT
பல்வேறு குறுகிய தெருக்களிலும் சென்று பெண்களிடம் தனது கணவருக்கு ஓட்டு அளிக்கும்படி துர்கா ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை:

கணவர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் கூட அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் அரசியலில் எந்த வித ஆர்வமும் காட்டுவதில்லை.

மிக அரிதாக எப்போதாவது கணவரோடு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உண்டு. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் மட்டும் அவருக்காக பிரசாரம் மேற்கொள்வார்.

அதே போல இந்த தடவையும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினுக்காக தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்.

பிரசாரம் என்றால் மைக்கில் பேசுவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவற்றில் அவர் ஈடுபடுவது கிடையாது. நேரடியாக பெண்களை சந்தித்து ஓட்டு கேட்பதுதான் அவருடைய வழக்கம். அதே போல இப்போது கொளத்தூர் தொகுதியில் ஆதரவு திரட்டி வருகிறார்.

பல்வேறு குறுகிய தெருக்களிலும் சென்று பெண்களிடம் தனது கணவருக்கு ஓட்டு அளிக்கும்படி துர்கா ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினரை கூட்டி அவர்களிடமும் கணவரின் சாதனைகளை சொல்லி வாக்குகளை கேட்டார். இதே போல மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியிலும் அவர் வாக்கு சேகரிக்க திட்டமிட்டு உள்ளார்.

வாக்கு சேகரித்து கொண்டு இருந்த இடத்தில் நிருபர்கள் அவரை சந்தித்து பேசினார்கள்.அப்போது துர்கா ஸ்டாலின் கூறும்போது, ‘எனது கணவர் தீவிர அரசியலில் இருந்த போதிலும் நான் 100 சதவீதம் குடும்பத் தலைவியாகவே இருந்து வருகிறேன், என்று கூறினார்.

அவரிடம் மகன் உதயநிதிக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் நீங்கள் வற்புறுத்தினீர்களா என்று கேட்டதற்கு, ‘இது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல, கட்சி எடுத்த முடிவு, என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, எந்த ஒரு தாயும் தனது குழந்தை அரசியலுக்கு வரும்போது அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் விரும்புவார். அது தான் அனைத்து தாயினுடைய கனவுகளாகும்.

எனது மகனை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் மிக சிறப்பாக செயல்படுவார். கடுமையாக உழைப்பார் என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் மந்திரி ஆவாரா என்று கேட்டதற்கு,‘ இது பற்றியும் கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார். மு.க.ஸ்டாலின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தீர்களா? என்று கேட்டதற்கு, அவருடைய வெற்றிக்காக மட்டும் அல்லாமல் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன் என கூறினார்.

Tags:    

Similar News