லைஃப்ஸ்டைல்

தம்பதியர் இடையே நல்ல பேச்சு நல்லுறவை வளர்க்கும்

Published On 2017-07-25 04:04 GMT   |   Update On 2017-07-25 04:04 GMT
கணவன் - மனைவி இடையே முரண்பாடான எண்ணங்கள் தோன்றுவது இனிமையாக, சந்தோஷமாக தொடர்ந்து வந்த உறவுக்குள் இடைவெளியை ஏற்படுத்திவிடும்.
திருமணமான புதிதில் கணவன்-மனைவி இருவருக்கும் பிடித்த விஷயமாக இருப்பதெல்லாம் ஐந்தாறு ஆண்டுகளுக்கு பிறகு சச்சரவுக்குரியதாக தோன்றும் நிலையும் பல குடும்பங்களில் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் அன்போடு அணுகியவற்றையெல்லாம் சிலர் வெறுப்போடு பார்க்கத்தொடங்கிவிடுகிறார்கள். கணவன்-மனைவி இடையே இத்தகைய முரண்பாடான எண்ணங்கள் தோன்றுவது இனிமையாக தொடர்ந்து வந்த உறவுக்குள் இடைவெளியை ஏற்படுத்திவிடும்.

ஒருசிலர் சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் சகித்து கொள்ள மனமின்றி பூதாகரமாக்கிவிடுவார்கள். ஒருவர் மற்றவரை குறை சொல்வது, எதிர்த்து பேசுவது, அல்லது எதுவும் பேசாமலேயே நாட்களை நகர்த்துவது என மனஸ்தாபத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பாங்கோ, சகிப்பு தன்மையோ இல்லாமல் போவதே பிரச்சினையை விஸ்வரூப மெடுக்க வைக்கிறது.

காதலித்து திருமணம் செய்துகொள்பவர்கள் நிலைமை தான் பெரும்பாலும் பரிதாபமாக இருக்கிறது. காதலிக்கும்போது இருவரது ரசனையும் ஒத்துப்போயிருக்கும். சில சந்திப்புகளிலேயே ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்ட வர்களாகி இறுதி முடிவு எடுத்து இல்லற பந்தத்துக்குள் நுழைய விரும்புவார்கள். ஆனால் அவர்கள் மனதில் காதல் உணர்வே தலைதூக்கி நிற்கும். திருமணம் பற்றிய புரிதலோ, எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனையோ எட்டிப்பார்க்காது.

தாங்கள் ஒன்றிணைவதற்காக எத்தகைய இழப்புகளையும், அவமானங்களையும் தாங்கிக்கொள்வதற்கு தயாராக இருப்பார்கள். குடும்ப கவுரவம், அந்தஸ்தையெல்லாம் உதறி தள்ள தயங்க மாட்டார்கள். இருவருக்கும் ஒத்து வராது என்று நினைக்கும் விஷயத்தை கூட தங்களுக்கு சாதகமானதாக கருதும் மனோ நிலையில் இருப்பார்கள். அப்போது நினைத்தது வேறு, தற்போது உண்மை வேறு என்பதை உணரும் போதுதான் அவர்களுக் கிடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.

பொதுவாகவே ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் வளர்ந்த விதத்தில் வித்தியாசங்கள் இருக்கும். அவர்களின் சுபாவங்களும், குணாதிசயங்களும் வெவ்வேறாக இருக்கும். அதனை இருவரும் அறிந்து கொள்வது மிக அவசியம்.



பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்தவர்களிடம் சில வாரங்களிலேயே வீட்டுக்கவலை எட்டிப்பார்க்கும். தங்களை பெற்றோர் எப்படியெல்லாம் வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை நினைத்து பார்த்து கலங்குவார்கள். காதலனுடன் கரம் கோர்க்கும் வாழ்க்கை எதிர்பார்த்தவாறு அமையாத பட்சத்தில் ‘பெற்றோர் பேச்சை கேட்காமல் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டேனே’ என்று பெண்கள் புலம்புவார்கள்.

சில புதுமணத்தம்பதியர் ஒருவர் மீது மற்றொருவர் அக்கறை கொள்வது போல வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால் அவர்களிடத்தில் உண்மையான அன்பு இருக்காது. சமுதாயத்திற்காக தாங்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் நடந்துகொள்வார்களே தவிர மனதளவில் பிரிந்திருப்பார்கள்.

சில ஆண்கள் மனைவி விரும்பும் வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திக்கொடுப்பவர்களாக இருப்பார்கள். மனைவி மீது அன்பும், அக்கறையும் இருந்தும் அதனை வெளிக்காட்ட தெரியாதவர்களாக இருப்பார்கள். தான் உண்டு, தன் வேலையுண்டு என்ற மனநிலையில் இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பார்வையில் மனைவியை நாம் சந்தோஷமாக வைத்திருக்கிறோம்’ என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.

ஆனால் மனைவியிடத்தில், ‘தன்மேல் துளியும் அக்கறை இல்லாதவராக இருக்கிறாரே?’ என்ற கவலை குடிகொண்டிருக்கும். அதனை கணவரிடம் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அதுவும் கணவன்-மனைவி விரிசலுக்கு பிரதான காரணமாக இருக்கிறது. தம்பதியர் இருவரும் எத்தகைய நெருக்கடிகளில் இருந்தாலும் மனம் விட்டு பேசுவதற்கான சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

சாதாரண விஷயமாகவே இருந்தாலும் ஆர்வத்தோடு கேட்க வேண்டும். கேட்டால்தான் கணவர் தன்மீது அக்கறை வைத்திருப்பதாக மனைவி கருதுவார். ஏனெனில் ஆரம்பத்தில் இத்தகைய விஷயம்தான் ஒருவர்மீது மற்றொருவருக்கு ஈர்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கும். அதனை தொடர்ந்து தக்க வைப்பதற்கு தினமும் சில மணி துளிகளாவது அன்போடு, அக்கறையோடு பேச வேண்டும்.
Tags:    

Similar News