ஆன்மிகம்

கபாலீசுவரர் கோவிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2019-03-18 03:43 GMT   |   Update On 2019-03-18 03:43 GMT
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா மற்றும் விடையாற்றி விழா தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கபாலீசுவரர் மற்றும் கற்பகம்பாள் தேரில் எழுந்தருளினர். ‘திரிபுர சம்ஹாரம்’ நடைபெறும் வகையில் தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரருக்கு வில், அம்புடன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி தொடங்கி வைத்தார். மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்து வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பகல் 11 மணி அளவில் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பித்து, சுவாமி, அம்பாள் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

தேர் திருவிழாவில் சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஐந்திருமேனிகள் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு நாதஸ்வரம் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்தது.

விழா ஏற்பாடுகளை தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News