ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2019-01-14 03:04 GMT   |   Update On 2019-01-14 03:04 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல் 17-ந் தேதி (வியாழக்கிழமை) வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் நேற்று முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருகை தந்திருந்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு ஒரு வரலாறு கதை உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிருங்கி முனிவர் அண்ணாமலையாரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்த போது பிருங்கி முனிவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு.

இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது. தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.

இதையடுத்து 17-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரரும் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

கிரிவலம் முடித்துவிட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தின் அருகே மறுவூடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனுடன் திருவூடல் திருவிழா முடிகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News