ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 24-ந் தேதி நடக்கிறது

Published On 2018-10-22 05:49 GMT   |   Update On 2018-10-22 05:49 GMT
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இக்கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று. உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது. அன்னாபிஷேகம் என்பது வெண்ணெய் கலந்த சாதத்தால் லிங்கரூபமான அருணாசலேஸ்வரருக்கு அலங்காரம் செய்து அன்னத்தை படைப்பார்கள். இந்த விழா வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விழாவின்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வழக்கம் போல் அனுமதிக்கப்படும்.

அன்னாபிஷேகத்தன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. அதன்பிறகு வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

அன்னாபிஷேக விழாவையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. வெளிநாட்டு பக்தர்களும் வந்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி நேற்று கோவிலுக்கு திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். 
Tags:    

Similar News