ஆன்மிகம்
மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து அருள்பாலித்த காட்சி.

தங்கக்கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2018-09-18 03:54 GMT   |   Update On 2018-09-18 03:54 GMT
திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடந்தது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை, ‘சிகர’ நிகழ்ச்சியாக தங்கக் கருட வாகன வீதிஉலா (கருட சேவை உற்சவம்) நடந்தது.

அதில் தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகிவற்றாலும், லட்சுமி ஆரம், மகர கண்டி, சகஸ்ர நாமாவளி ஆரம், கடிக அஸ்தம் ஆகியவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். உற்சவர் மலையப்பசாமி மற்ற நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தாலும் தனது சொந்த வாகனமான கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. வழக்கமாக, கருட சேவை இரவு 9 மணிக்கு தொடங்கி நடந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு இரவு 7 மணிக்கே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. அதனை பார்ப்பதற்காக மாடவீதி ஒன்றில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, குஜராத், புதுச்சேரி உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பக்தர்களின் கண்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுகுண்டல வாடா, வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா... அனாத ரட்சகா, ஆபத் பாந்தவா கோவிந்தா... கோவிந்தா... என விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கருட சேவையை பார்ப்பதற்காக நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் காலை 10 மணியளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு குடிநீர், மோர், உணவு ஆகியவற்றை ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் வழங்கினர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஒவ்வொரு கேலரிகளில் ஒரு தேவஸ்தான என்ஜினீயர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல்படை வீரர்கள், சாரண-சாரணியர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது. 
Tags:    

Similar News