ஆன்மிகம்
வாகைபதி நாராயணசாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

வாகைபதி நாராயணசாமி கோவிலில் தேரோட்டம்

Published On 2018-02-14 05:14 GMT   |   Update On 2018-02-14 05:14 GMT
அம்பை அருகே உள்ள வாகைபதி நாராயணசாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வாகைகுளத்தில் வாகைபதி நாராயணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், அன்னதர்மமும் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் அய்யா தண்டிகை, சூரியன், பல்லக்கு, அனுமன், நாகம், பூம்பல்லக்கு, காளை ஆகிய வாகனத்தில் பவனி வந்தார். 10-ம் திருநாளான 11-ந் தேதி அய்யாவழி பக்தர்களின் பால்குட ஊர்வலமும், அங்கபிரதட்சணமும் நடைபெற்றது.

தொடர்ந்து 11-ம் திருநாளான நேற்று முன்தினம் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு செண்டை மேளம் முழங்க, அய்யா சிவசிவ அரகர என்ற பக்தி கோஷத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேருக்கு முன்பு சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. தொடர்ந்து இரவு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அன்னதர்மம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அய்யாவழி அன்புக்கொடி மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News