ஆன்மிகம்
உத்தரகோசமங்கை வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

உத்தரகோசமங்கை வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2018-02-06 03:20 GMT   |   Update On 2018-02-06 03:20 GMT
உத்தரகோசமங்கை வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோவிலின் உபகோவிலான சுயம்பு வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் யாகசாலை வேள்விகள், பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

அதன் பின்னர் தேவேந்திர சிவாச்சாரியார் தலைமையில் ராமலிங்க சிவம் மற்றும் வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர்.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து காலை 9.15 மணிக்கு வாராஹி அம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வாராஹி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான ராணி ராஜராஜேசுவரி, திவான் மகேந்திரன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, ஆன்மிக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சுயம்புவாக அமைந்த வாராஹி அம்மன் கோவில் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள இக்கோவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News