ஆன்மிகம்
தவக்கோலத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்த காட்சி.

சூரபத்மனை சம்ஹாரம் செய்ய இன்று தாயிடம் சக்திவேல் வாங்கும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்

Published On 2017-10-24 03:36 GMT   |   Update On 2017-10-24 03:36 GMT
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்குகிறார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி தவக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல சண்முகர் சன்னதியில் சண்முகார்ச்சனை நடந்தது. மேலும் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு மயில்வாகன சேவை அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.



திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணிக்கு கோவிலுக்குள் ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் இருமாப்பு கொண்ட சூரபத்மனை வெல்லுவதற்காக முருகப் பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.

இதையொட்டி அங்கு ஏராளமாக பக்தர்கள் குவிந்து பயபக்தியுடன் தரிசனம் செய்கின்றனர். திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை (புதன்கிழமை) சூரசம்ஹாரமும், 26-ந்தேதி காலை கிரிவலப்பாதையில் சட்டத்தேர் பவனியும், மாலையில் பாவாடை தரிசனமும், கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்ககவச அலங்காரமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவிதாபிரியதர்ஷினி செய்து வருகிறார்.
Tags:    

Similar News