ஆன்மிகம்

நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளிலும் கொடுக்க வேண்டிய தானம்

Published On 2017-09-22 07:58 GMT   |   Update On 2017-09-22 07:58 GMT
எந்தெந்த பொருட்களை நவராத்திரி நாட்களில் பிறருக்கு தானமாக அளிக்கின்றார்களோ, அந்தப் பொருளுக்காக வாழ்க்கையில் பிறரிடம் என்றுமே மையேந்த மாட்டார்கள்.
நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளுமே பூஜையின் நிறைவாக மங்கலப் பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். இதன் தாத்பர்யம் என்னவென்றால் எந்தெந்த பொருட்களை நவராத்திரி நாட்களில் பிறருக்கு தானமாக அளிக்கின்றார்களோ, அந்தப் பொருளுக்காக வாழ்க்கையில் பிறரிடம் என்றுமே மையேந்த மாட்டார்கள்.

நவராத்திரியை பிரதமை திதியில் ஆரம்பிக்கும்போது வீட்டிற்கு வருபவர்களுக்கு கூந்தல் அலங்காரம் செய்வதற்குத் தேவையான எண்ணெய், ஹேர் பின், ரிப்பன், மலர்கள் போன்ற பொருட்களை ஆடையோடு சேர்த்து தானமாக அளிக்க வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

துவிதயை திதி நாளில் குங்குமம், மஞ்சளை ஆடைகளோடு சேர்த்து தானமாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்தால் அன்னவள் குங்குமத்திற்குப் பங்கம் வராது.

திருதியை திதியில் கண்ணாடி, மஞ்சள், கண் மை மற்றும் ஆடைகளை தானமாகக் கொடுக்க வேண்டும். சதுர்த்தி திதியில் கணவன், மனைவியை வரவழைத்து அவர்கள் இருவருக்கும் மஞ்சள் அல்லது பொன் நிற ஆடைகளுடன் சேர்த்து மஞ்சள், சந்தனம் தானமாகக் கொடுக்க வேண்டும். இதனால் காரியத் தடங்கல்கள், திருமண தோஷங்கள் தீரும்.

பஞ்சமி திதி நாளில் ஏதேனும் ஐந்து மங்கலப் பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம், கண்ணாடி, கண் மை, தாலிச்சரடு, சீப்பு, ரிப்பன் இதுபோன்ற பொருட்களில் ஐந்தோ அல்லது அதற்கு மேற்பட்டோ அவரவர் வசதிக்கேற்ப ஆடைகளுடன் கொடுக்க வேண்டும். இதனால் திருமணத் தடங்கல்களுக்கு முறையான தீர்வினைப் பெறமுடியும்.



நவராத்திரி சஷ்டி திதியில் ஆறு விதமான தர்மங்களைச் செய்ய வேண்டும். அவை முறையே மஞ்சள், குங்குமம், சந்தனம், திருநீறு, புடவையுடன் இரவிக்கை மற்றும் பணம் தானம் (தட்சணை) கொடுக்க வேண்டும்.

சப்தமி திதியில் வீட்டிற்கு வருகின்றவர்களைப் பாடச் சொல்ல வைத்து ஏழு விதமான மங்கலப் பொருட்களை தானமாகக் கொடுக்க வேண்டும். அஷ்டமி திதியில் அஷ்ட கஜங்களை வணங்க வேண்டும். யானையை வரவழைத்து பிரசாதம், குறிப்பாக தேங்காய் உண்ணக் கொடுத்து, அதற்கு பூஜை செய்து, அனைத்துப் பெண்களும், ஆண்களும் யானையை வலம் வந்து வணங்க வேண்டும். இதற்கு கஜ பூஜை என்று பெயர். இன்று பொன், வெள்ளி போன்ற உலோகத்தாலான பொருட்களை தானமான அளிக்க வேண்டும்.

நவராத்திரியில் வரும் நவமி திதியே தேவகுதிரை பிறந்தநாள். ஆகவே, நவமி திதியன்று வெள்ளைக்குதிரையை அழைத்து வந்து, கொள்ளினை உண்ணக் கொடுக்க வேண்டும். பின்னர் குதிரையை அனைவரும் வலம் வந்து வணங்க வேண்டும். பள்ளியில் படிப்பதற்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள். சிலேட்டு, எழுதுகோல் போன்றவை ஏழைச் சிறுவர், சிறுமியருக்கு தானமாகத் தரலாம்.

பத்தாம் நாளான தசமி திதியில் அனைத்து தான தர்மங்களையும் செய்து விழாவாகக் கொண்டாட வேண்டும். தேவராம், திருவாசகம், தேவி பாகவதம், திருப்புகழ் போன்ற பக்தி நூல்களை ஏழை எளியவர்களுக்கு தானமாகத் தர வேண்டும்.

இப்படி நவராத்திரி 9 நாட்களிலும் தான தர்மங்களை முறையாகச் செய்தால் நவராத்திரி பூஜை செய்த பலனை பூரணமாகப் பெற முடியும்.
Tags:    

Similar News