ஆன்மிகம்
வரதராஜ பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பழனி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்

Published On 2017-09-08 03:50 GMT   |   Update On 2017-09-08 03:50 GMT
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் ஆவணி பிரம்மோற்சவ விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த ஆண்டு ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் தினசரி காலை 7 மணிக்கு சப்பரத்தில் சாமி புறப்பாடும், இரவு 7 மணிக்கு பவளக்கால் சப்பரம், அனுமார் வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் மற்றும் சேஷ வாகனங்களில் சுவாமி உலா காட்சி நடைபெற்று வருகிறது.

7-ம் நாளான நேற்று இரவு 7.30 மணிக்கு அகோபில வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைதீக முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்று, கோவில் பட்டர் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

பின்னர் திருமண பாடல்கள் பாடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நாளை காலை 7 மணிக்கு தேர் ஏற்றமும், 8 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News