ஆன்மிகம்
அதிபத்த நாயனாரின் வாகனத்தை மீனவர்கள் கடலுக்குள் படகில் எடுத்து சென்றதை படத்தில் காணலாம்.

நாகையில் அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் திருவிழா

Published On 2017-08-22 03:12 GMT   |   Update On 2017-08-22 03:12 GMT
நாகையில் அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் திருவிழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
நாகையில் உள்ள நுளைப்பாடி என்று அழைக்கப்பட்ட நம்பியார் நகரில் பிறந்தவர் அதிபத்தர். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர், மீனவ சமுதாயத்தில் பிறந்தவர் ஆவார். சிவபெருமான் மீது மிகுந்த பக்தியை கொண்டிருந்த இவர், தான் கடலுக்கு சென்று பிடிக்கும் மீன்களில் ஒன்றை சிவபெருமானுக்கு சமர்ப்பிப்பது வழக்கம்.
சிலநேரங்களில் வலையில் ஒரு மீன் சிக்கினாலும் அதையும் சிவபெருமானுக்கே கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்வார். இவரின் பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான் கடலில் இருந்து தங்க மீன் ஒன்றை அதிபத்தர் வலையில் சிக்க வைத்தார். ஆனால் அதிபத்தர் தனக்கு கிடைத்த தங்க மீனையும் வீட்டிற்கு எடுத்து செல்லாமல், சிவபெருமானுக்கே சமர்ப்பித்தார்.

அதிபத்தரின் பக்தியை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளி அவருக்கு காட்சி கொடுத்தாக கூறப்படுகிறது. இந்த புராண நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகை காயாரோகணசாமி கோவிலில், சிவபெருமானுக்கு அதிபத்த நாயனார் தங்க மீன் வழங்கும் திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவின்போது கோவிலில் இருந்து வெள்ளி காளை வாகனத்தில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகை புதிய கடற்கரையை அடைவார். அங்கு அதிபத்த நாயனார் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும்போது தங்க மீன் கிடைக்கும் காட்சியும், அதை சிவபெருமானுக்கு வழங்கும் காட்சியும் நடைபெறும்.


தங்க மீன் திருவிழாவை காண நாகை புதிய கடற்கரையில் திரண்டு இருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

அதன்படி ஆயில்யம் நட்சத்திர நாளான நேற்று மாலை அதிபத்தர், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் திருவிழா நாகை புதிய கடற்கரையில் நடைபெற்றது. முன்னதாக வெள்ளி காளை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான், பார்வதி தேவியுடன் எழுந்தருளி ஊர்வலமாக நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு சென்று அடைந்தார்.

அப்போது நம்பியார் நகர், ஆரியநாட்டு தெரு, சாமந்தான்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களின் சார்பில் அதிபத்த நாயனாருக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து புதிய கடற்கரையில் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. பின்னர் அதிபத்த நாயனாரின் வாகனத்தை மீனவர்கள் பைபர் படகில் ஏற்றி கடலுக்குள் கொண்டு சென்று, மீன் வலைவீசி தங்க மீன் பிடிக்கும் உற்சவமும், அதைதொடர்ந்து அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழாவும் நடைபெற்றன.

விழாவில் திருவண்ணாமலை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு தேவார திருமுறைகளை பாடினர். பஞ்ச வாத்தியமும் இசைக்கப்பட்டது.

Tags:    

Similar News