search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபத்த நாயனார்"

    • சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
    • அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள்.

    இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.

    விரிதிரைசூழ் கடற்நாகை அதிபதற்கடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற அதிபத்த நாயனார் பற்றி இந்த நாயனார் வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம்.

    சோழநாட்டில் நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் திருநுழைப்பாடி என்ற இடத்தில் மீன்பிடித்து வியாபாரம் செய்யக்கூடிய மீனவ சமுதாயமான பரதவ இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபத்த நாயனார் இருந்தார்.

    அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள். தன்னுடைய சிறு வயதில் இருந்தே சிறந்த சிவ பக்தராக இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன்பிடிக்கப்போகும் போதும் தன்னுடைய வலையில் சிக்கக்கூடிய முதல் மீனை எடுத்து இந்த மீன் இறைவனாகிய சிவபெருமானுக்கு உரியது என்று சொல்லி கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அதிபத்த நாயனாரில் உயர்ந்த பக்தியை உலகிற்கு உணர்த்த சிவபெருமான், தன்னுடைய திருவிளையாடலை அதிபத்த நாயனாரிடம் நடத்த ஆரம்பித்தார்.

    அதிபத்த நாயனார் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது மீன்கள் சிக்குவது குறைந்துகொண்டே வந்தது. இதனால் அதிபத்த நாயனாரின் குடும்பத்தில் வறுமை ஏற்படத்தொடங்கியது. ஆனாலும் அதிபத்த நாயனார் தன்னுடைய வலைகளில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அளிப்பதை நிறுத்தவே இல்லை.

    இப்படியே நாட்கள் நகர்ந்தது. அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிபத்த நாயனாரின் வலையில் ஒரேஒரு மீன் மட்டும் சிக்குமாறு விளையாடினார் சிவபெருமான். அதிபத்த நாயனாரும் வழக்கம்போல இந்த மீன் என்னை படைத்த சிவபெருமானுக்கு உரியது. சிவார்ப்பணம் என்று கூறி கடலில் விட்டார்.

    காலப்போக்கில் அதிபத்த நாயனாரின் குடும்பமே கடுமையான வறுமையில் வாடியது. அதிபத்த நாயனாரின் உடலும் நாளுக்கு நாள் தளர்ந்துகொண்டே வந்தது. இதைபார்த்து மிகுந்த கவலையுடன் அதிபத்த நாயனாரின் மனைவி கணவனிடம் நம் பசியை தீர்க்க வீட்டில் எந்த பொருளுமே இல்லை. நம் குழந்தைகள் எல்லோரும் பசியுடன் பலவீனமாக இருக்கிறார்கள். நீங்கள் பொருள் ஏதாவது சம்பாதித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

    அதிபத்த நாயனாரும் தனது மனைவி சொல்வதை கேட்டு தனது குழந்தைகளுக்காக கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அதிபத்த நாயனார் வீசிய வலையில் நவரத்தினங்களும், நவமணிகளும் பதித்த ஒரு தங்க மீன் ஒன்று வலையில் மாட்டியது.

    இதைக்கண்டதும் அருகில் இருந்தவர்கள் அதிபத்த நாயனாரே இன்று உமக்கு ராசியான நாள். அதனால் தான் நீங்க வீசிய வலையில் தங்க மீன் கிடைத்துள்ளது. இந்த மீனை கொண்டுபோய் உங்க மனைவியிடம் கொடுங்க. உங்களது வம்சமே செல்வச்செழிப்பாக வாழலாம் என்று சொன்னார்கள்.

    தங்க மீனை கண்டதும் அதிபத்த நாயனாரின் மனதில் எந்த சலனமும் இல்லாமல் வழக்கம் போல் வலையில் சிக்கிய முதல் மீனை இறைவனுக்கு கொடுப்பது போலவே இந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கு உரியது என்று கூறி கடலில் விட்டு விட்டார்.

    அதிபத்த நாயனாரின் இந்த செயலைக்கண்டு அருகில் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றனர். அப்போதுதான் சிவபெருமானும், பார்வதிதேவியும் அதிபத்த நாயனாருக்கு காட்சி அளித்தனார். அதுமட்டுமில்லாமல் கையில் தன்னுடன் இருக்கக்கூடிய பேரின்ப வரத்தையும் அதிபத்த நாயனாருக்கு அளித்தனர்.

    இன்றைக்கும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தங்க மீனை சிவபெருமானுக்கு கொடுக்கும் திருவிழா நாகப்பட்டினத்தில் உள்ள காயரோகன சுவாமி கோவில் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை ஒரு கட்டுமரத்தில் வைத்து மீன்பிடிக்க கடலுக்கு போவார்கள். அப்போது கடலில் வலைவீசுவது போலவும், அந்த வலையில் தங்க மீன் சிக்குவது போலவும் அதை அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவணை செய்வார்கள்.

    அந்தநேரத்தில் கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு முக்தி அளிக்க கடற்கரைக்கு வருகிறார். கடற்கரைக்கு வரும் சிவபெருமானுக்கு அந்த தங்க மீனை படைத்து பூஜையும் செய்வார்கள். அப்போது அந்த கடற்கரைக்கு வரக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் சிவபெருமான் அருளாசி புரிவார்.

    அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அருள் கிடைக்க பணமோ, பொருளோ கல்வியோ தேவையில்லை. தூய்மையான மனமும்ம் இறை அர்ப்பணிப்பு மட்டும் இருந்தால் போதுமானது. சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பதை தான் இந்த அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கிறது.

    ×