ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவில் பழனியாண்டவர் சன்னதியில் இருந்து காவடி ஏந்தி வந்த கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி 2,500 காவடி ஊர்வலம்

Published On 2017-08-16 03:31 GMT   |   Update On 2017-08-16 03:31 GMT
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,500 காவடிகள் எடுத்து பக்தர்கள் மாடவீதியை ஊர்வலமாக சுற்றி வந்தனர்.
முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆடி கிருத்திகை விழாவும் ஒன்றாகும். ஆடிகிருத்திகையன்று பக்தர்கள் விரதம் இருந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முருகன் கோவில்களுக்கு காவடி ஏந்தி சென்று முருகனை வழிபடுவார்கள். நேற்று ஆடி கிருத்திகை விழா அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள பழனியாண்டவர் சன்னதியில் வள்ளி-தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து காவடி ஊர்வலம் நடந்தது. காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். பழனியாண்டவர் சன்னதி முன்பாக காவடிகளுடன் காத்திருந்தனர்.

முருகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் காவடி ஊர்வலம் நடந்தது. இதில் சிறுகுழந்தைகள் முதல் பெண்கள், ஆண்கள் என 2,500 பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப காவடிகளை தங்கள் தோளில் சுமந்து ‘முருகருக்கு அரோகரா’, ‘முருகருக்கு அரோகரா’ என கூறியபடி அங்கிருந்து புறப்பட்டு மாடவீதியை ஊர்வலமாக சுற்றி வந்தனர்.

2,500 காவடிகளை பக்தர்கள் மாடவீதியை சுற்றி வந்ததால் மாடவீதியின் அனைத்து பகுதிகளும் காவடியாக காட்சியளித்தது.

இதேபோல் சின்னக்கடை தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள முருகர் கோவிலிலும் ஆடி கிருத்திகை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News