சினிமா

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய ஐகோர்ட்டு தடை

Published On 2017-06-17 05:18 GMT   |   Update On 2017-06-17 05:18 GMT
‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான ‘டிரைலர்’ காட்சிகளும் வெளியானது.

இதையடுத்து, இந்த திரைப்படத்தை தடைசெய்யும்படி, சென்னை போலீஸ் கமிஷனரிடம், சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவர் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதை ஆசிரியர் ரவி ஆகியோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், மனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை 3 பேரையும் கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News