செய்திகள்

தமிழகத்தில் 20 தொகுதி தேர்தல் நடந்தால் அ.தி.மு.க.வே இல்லாமல் போய்விடும் - காங்கிரஸ் பிரமுகர் அறிக்கை

Published On 2019-01-19 10:57 GMT   |   Update On 2019-01-19 10:57 GMT
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் தமிழகத்தில் தானாகவே அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதோடு அக்கட்சியே இல்லாமல் போய்விடும் என காங்கிரஸ் பிரமுகர் கூறியுள்ளார். #ADMK #Congress
புதுச்சேரி:

முத்தியால்பேட்டை முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகனுக்கு புதுவை காங்கிரஸ் ஆட்சியை பற்றி பேசுவதற்கு தகுதிகள் இல்லை.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் படிப்படியாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசின் நிதி நிலைமைக்கேற்றவாறு நிறைவேற்றி வருகிறது.

மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் நாராயணசாமி எந்த அளவுக்கு போராடி வருகிறார் என்று புதுவை மக்கள் நன்கு அறிவர். திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது யார்? என்றும் நன்கு அறிவர்.

ஆனால், தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க. ஆட்சி அல்ல. அங்கு மோடியின் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதனால் அங்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கவர்னர் துணையாக இருந்து வருகிறார்.

ஆனால், புதுவையில் அந்த மாதிரி இல்லை. அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு தைரியம் இருந்தால் பொங்கல் பரிசு பொருட்கள் ஏன் அனைத்து கார்டுகளுக்கும் வழங்க கவர்னர் அனுமதி வழங்கவில்லை என கவர்னரை எதிர்த்து போராட வேண்டும்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்று அன்பழகன் கூறுகிறார். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் தமிழகத்தில் தானாகவே அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதோடு அக்கட்சியே இல்லாமல் போய்விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் ஆட்சியை விட்டுக்கொடுத்தார் என்று கூறியுள்ளார். அது கூட்டணி முடிவு. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து வாக்குகளை பெற்றதால் தான் தமிழகத்தில் அப்போது ஆட்சி அமைக்க அ.தி.மு.க.வால் முடிந்தது என்பது யாவரும் அறிந்தது.

இதுபோல் அரசியல் பேசாமல் தமிழகத்துக்கு சென்று அரசியல் கற்று பின்னர் புதுவையில் அரசியல் பேச வந்தால் ஏற்புடையதாக இருக்கும்.

இவ்வாறு கலியபெருமாள் கூறியுள்ளார். #ADMK #Congress
Tags:    

Similar News