செய்திகள்

பெர்மிட் இல்லாமல் ஓட்டிய 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

Published On 2018-11-05 06:46 GMT   |   Update On 2018-11-05 06:46 GMT
தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #OmniBuses
சென்னை:

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் 6 இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. கடந்த 3 நாட்களில் 5½ லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 3 நாட்களாக அவர் நள்ளிரவு வரை அனைத்து பஸ் நிலையங்களுக்கும் சென்று மக்கள் தேவையறிந்து பஸ்களை இயக்க உத்தரவிட்டார்.

தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை இயக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

நேற்று 1413 ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

லைசென்சு, பதிவு சான்று எப்.சி. இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய ஆம்னி பஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.31 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 4 ஆம்னி பஸ்கள் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்டதால் அந்த பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதவிர 11 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த பஸ்களில் பயணம் செய்த பயணிகளிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்த போது, வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்டதால் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட டிக்கெட் கட்டணத்தை ஆம்னி பஸ் ஆபரேட்டரிடம் இருந்து பெறப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தி, இணை ஆணையர் முத்து ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நடந்த சோதனையில் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி சிறப்பு பஸ்களில் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று வரை சுமார் 5½ லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்று 2 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 11 ஆம்னி பஸ்களில் இருந்து கூடுதல் கட்டணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். #OmniBuses
Tags:    

Similar News