search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்ப்-ரஷியா இடையேயான தொடர்புக்கு ஆதாரம் இல்லை
    X

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்ப்-ரஷியா இடையேயான தொடர்புக்கு ஆதாரம் இல்லை

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, டிரம்ப்-ரஷியா இடையே தொடர்பு இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற விசாரணைக் குழுவினர் கூறுகின்றனர். #DonaldTrump #Russia
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, டிரம்ப்-ரஷியா இடையே தொடர்பு இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற விசாரணைக் குழுவினர் கூறுகின்றனர்.

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.



    இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

    ஆனால் இந்த தேர்தலில் டிரம்ப் பிரசார குழுவினரும், ரஷிய நாட்டினரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, ஹிலாரியை தோற்கடித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை இரு தரப்பினரும் மறுத்தனர்.

    இருப்பினும் இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் (கீழ்சபை) உளவுக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை ஓராண்டு காலம் நடைபெற்றது.

    இந்த விசாரணை குழுவினர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிட்டது என்பதை ஒப்புக்கொண்டனர். அதே நேரத்தில், இது டிரம்ப் வெற்றி பெறுவதற்கு உதவியது என்ற அமெரிக்க உளவுத்துறையினரின் தகவலை நிராகரித்தனர்.

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை தடுத்து நிறுத்துவதற்கு ஒபாமா அரசு தவறிவிட்டது என குற்றம் சாட்டினர்.

    இதுபற்றி அந்தக் குழுவில் அதிகளவில் இடம் பெற்று உள்ள குடியரசு கட்சியினர் கூறுகையில், “டிரம்ப் பிரசாரத்துக்கும், ரஷிய நாட்டினருக்கும் இடையே கூட்டோ, ஒருங்கிணைப்பு சதித்திட்டமோ இருந்ததற்கான ஆதாரத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டனர்.

    நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் (கீழ்சபை) உளவுக்குழு தலைவர் டெவின் நியுன்ஸ் கூறும்போது, “ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்த ரஷிய விசாரணை முடிவுக்கு வந்து உள்ளது. இப்போது அது குறித்த அறிக்கையை இறுதி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளோம்” என குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறுகையில், “எங்கள் கண்டுபிடிப்பும், பரிந்துரைகளும் இந்த ஆண்டு நடக்க உள்ள இடைத்தேர்தலில் பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

    அதே நேரத்தில் இந்த தகவல்களால் எதிர்க்கட்சியினராகிய ஜனநாயக கட்சியினர் குழப்பம் அடைந்து உள்ளனர். இருப்பினும், மேலும் சாட்சிகளை விசாரிக்கப்போவதாக கூறி உள்ளனர். டிரம்புக்கும், அவரது ஆலோசகர்களுக்கும், ரஷியாவுக்கும் தொடர்பு இருந்ததை நிரூபிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆடம் ஸ்சிப் கூறுகையில், “இந்த நடவடிக்கை வெள்ளை மாளிகையில் இருந்து வந்து உள்ள அழுத்தத்தால் தூண்டப்பட்டது” என குறிப்பிட்டார்.

    மேலும் கூறுகையில், “டிரம்ப் பிரசார குழுவினருக்கும், ரஷிய அதிகாரிகளுக்கும் இடையே எண்ணற்ற சந்திப்புகள் நடந்து உள்ளன. ரகசிய கூட்டங்களும், தகவல் பரிமாற்றங்களும் நடந்து உள்ளன” என குறிப்பிட்டார்.  #DonaldTrump #Russia #tamilnews
    Next Story
    ×