search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடியில் துரைமுருகனை கண்டித்து தே.மு.தி.க. மறியல்
    X

    காட்பாடியில் துரைமுருகனை கண்டித்து தே.மு.தி.க. மறியல்

    காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை கண்டித்து மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பிரதாப் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #DMDK #DuraiMurugan
    வேலூர்:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த ரகசிய பேச்சு வெளியானதால தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தன்னை தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணி சம்பந்தமாக பேசினர். ஆனால் தி.மு.க.வில் சீட் இல்லை என கூறியதாக பேட்டியளித்தார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த சுதீஷ், துரைமுருகனை தே.மு.தி.க. நிர்வாகிகள் தனிப்பட்ட காரணத்துக்காக மட்டும் சந்தித்தனர். கூட்டணி பற்றி பேசவில்லை என்றார். மேலும் துரைமுருகன் அவரது கட்சி குறித்தும், தலைமை பற்றியும் கூறியதை நான் சொன்னால் அசிங்கமாகிவிடும் என்றார்.

    இதற்கு பதிலடியாக துரைமுருகன் அளித்த பேட்டியில் சுதீஷ் மீது வைத்திருந்த மரியாதைக்கு அவரே குந்தகம் ஏற்படுத்துகிறார். தே.மு.தி.க.வினர் பாவம் நொந்து போயிருக்கிறார்கள். மேலும் கருத்துக்கூறி அவர்களை புண்படுத்த விரும்பவில்லை என்றார். இதனால் துரைமுருகன் மீது தே.மு.தி.க.வினர் கோபம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் காட்பாடியில் துரைமுருகன் வீடு அமைந்துள்ள ஓடைபிள்ளையார் கோவில் அருகில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பிரதாப் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    துரைமுருகனுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    அப்போது தி.மு.க.வினர் 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தே.மு.தி.க.வுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். இதனால் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது தே.மு.தி.க.வினர் போலீசாரிடையே வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசார் தே.மு.தி.க.வினரை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் காட்பாடியில் பதட்டம் ஏற்பட்டது. துரைமுருகன் வீடு, சித்தூர் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தகவல் அறிந்த தி.மு.க.வினர் ஏராளமானோர் துரைமுருகன் வீட்டின் அருகே குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #DMDK #DuraiMurugan

    Next Story
    ×