search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடியில் மழை நீடிப்பு - அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    நெல்லை, தூத்துக்குடியில் மழை நீடிப்பு - அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Rain
    தூத்துக்குடி:

    தமிழகம் அருகே மன்னார்வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. நேற்று காலை வரை விடிய விடிய மழை கொட்டியது.

    குறிப்பாக திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவானது. திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்த தென்னை மரம் இடி தாக்கியதில் தீப்பற்றி எரிந்தது. ஆத்தூர் போலீஸ் நிலையம் அருகில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அங்கு மின்தடை ஏற்பட்டது. ஆறுமுகனேரியிலும் சிவன் கோயில் அருகிலும், பிரதான சாலை அருகிலும் மின்வயர் அறுந்து விழுந்தது. தகவலறிந்து மின் ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளப் பகுதியில் மழைநீர் அதிகளவு தேங்கியதால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் நிலவியது. இரவு 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 9 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

    தூத்துக்குடியில் பிரதான பகுதிகளான குரூஸ் பர்னாந்து சிலை, பழைய மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கழிவுநீர் லாரிகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை மழை குறைந்தது. எனினும் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. உடன்குடி, குலசேகரன்பட்டினம், தண்டுப்பத்து, பரமன்குறிச்சி பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையும் மழை தூறிக்கொண்டிருந்தது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், அலுவலக பணிகளுக்கு செல்வோர் குடைபிடித்த படி சென்றனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அப்பகுதி முழுவதுமே குளிர்ந்த காலநிலை நிலவியது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லிமீட்டரில்) வருமாறு:-

    திருச்செந்தூர்-30, குலசேகரன்பட்டினம்-30, காடல்குடி-23, தூத்துக்குடி-8.1, ஸ்ரீவைகுண்டம்-4, விளாத்திகுளம்-2, சாத்தான்குளம்-1.2.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்தது. நாங்குநேரி, நெல்லை ஆகிய இடங்களில் லேசான மழையும், நம்பியாறு அணைப்பகுதியில் கன மழையும் பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 99.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 496.76 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.27 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.65 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 362 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கடனா அணை நீர்மட்டம் 65.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 61.75 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 20.50 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 109 அடியாகவும் உள்ளன. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்துவரும் மழையினால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுகிறது.

    மெயினருவி, ஐந்தருவியில் விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். எனினும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே தென்மேற்கு பருவ மழை காரணமாக சில பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பின. பெரும்பாலான குளங்களில் அதிகளவு தண்ணீர் நிரம்பியது.

    சமீபத்தில் பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கால்வரத்து குளங்களுக்கும், 50 க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளன. குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே வேளையில் சில பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையால் சேதமானது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. சுரண்டை பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள இரட்டை குளம் 2-வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்து செண்பகம் கால்வாயில் தண்ணீர் செல்கிறது.

    இத்தண்ணீர் இலந்தை குளம் செல்லுவதால் இலந்தை குளத்தில் இருந்து மீன்கள் செண்பகம் கால்வாயில் ஏறிவருகின்றன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் வலைகளை கொண்டு வந்து மீன்களை பிடித்து திருவிழாவை போல கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் விரால், கெண்டை, கெளுறு உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கின தண்ணீர் வருவதையும் மீன் பிடிப்பதையும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். #Rain

    Next Story
    ×