search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக ஸ்டாலின் கூறுவது நகைச்சுவை - அமைச்சர் காமராஜ் பேட்டி
    X

    தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக ஸ்டாலின் கூறுவது நகைச்சுவை - அமைச்சர் காமராஜ் பேட்டி

    தமிழகத்தில், மின்வெட்டு உள்ளதாக ஸ்டாலின் கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சில இடங்களில் நிலவி வரும் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டும், மின் இழப்பை குறைத்திடும் பொருட்டும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு ரூ.3 கோடியே 73 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் 33.11 கி.வோ கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் கூடுதலாக திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடங்க விழா நேற்று கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார், மன்னார்குடி செயற்பொறியாளர்கள் ராதிகா, காளிதாஸ், திருச்சி கட்டுமான மேற்பார்வை பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு புதிய திறன் மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் புதிய திறன் மின்மாற்றியால் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வடபாதிமங்கலத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிற்கு உள்ள மின்பாதை வழியாக மின் சாரம் வந்தது தவிர்க்கப்பட்டு தற்போது 5 கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ள மின் பாதை மூலம் மின்சாரம் வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    இந்த கூடுதல் திறன் மின்மாற்றி மூலம் கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் பயனாளிகள் பயன் அடைவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி வருவது காமெடியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு தமிழகமே இருளில் மூழ்கியதை தமிழக மக்கள் மறந்து விட மாட்டார்கள். மு.க.ஸ்டாலினும் மறந்து விட மாட்டார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியது என்பதை யாரும் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர் அகமது, நகர துணை செயலாளர் உதய குமார், பொருளாளர் பாஸ் கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅஸ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வரவேற்றார். முடிவில் கூத்தாநல்லூர் உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் நன்றி கூறினார். 
    Next Story
    ×