search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை- நாராயணசாமி
    X

    தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை- நாராயணசாமி

    பிரதமர் மோடி தனது 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். #PondicherryCM #Narayanasamy #PMModi
    கடலூர்:

    கடலூர் மாவட்ட உலகத்திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா கடலூரில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் மீட்கப்பட்டு ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். ஆனால் இதுநாள் வரை எந்த பணமும் வங்கியில் செலுத்தவில்லை. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை.

    ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். பொருளாதார வீக்கம் குறைக்கப்படும் என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்போம் என்றார். ஆனால், இதில் எதுவும் நடைபெறவில்லை.

    தமிழகத்திலேயே கடலூரில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் ரூ.34 மட்டுமே விற்பனை செய்கிறோம். இது மிகப்பெரிய கொள்ளை. இவ்வாறு, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு கொள்ளையடித்து வைத்துள்ளது.

    பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் எதுவும் நடைபெறவில்லை. ஜி.எஸ்.டி வரியால் பல தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லை, நிலம் விற்பனை முடக்கியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் கேட்டால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் சண்டை நடக்கிறது என்று கூறுகிறார், பிரதமர் மோடி.

    வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் மிகப்பெரிய பாடத்தை கற்பிக்கும்.

    இலங்கையில் தமிழர்கள் இறப்பிற்கு காங்கிரஸ் காரணமல்ல. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் எங்களுக்கு வருத்தம் இருந்தது. எனது தனிப்பட்ட கருத்து தலைவரை கொன்றவரை விடக் கூடாது என்பதே. ஆனால், ராகுல்காந்தி இந்த வி‌ஷயத்தில் தெரிவித்த கருத்தினை ஏற்றுக்கொண்டோம். அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்மீது ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். தீவிரவாதத்தால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் அதிகப்படியான இழப்பு. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தியை இழந்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க. எந்த இழப்பையும் சந்திக்கவில்லை. எனவே, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும்.

    இவ்வாறு கூறினார். #PondicherryCM #Narayanasamy #PMModi
    Next Story
    ×