search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு - போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம்
    X

    புதுக்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு - போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம்

    புதுக்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #HRaja #BJP

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளி வாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    நேற்று விஜர்சனம் செய்வதற்காக அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் மெய்யபுரம் ஊருக்குள் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல பொது மக்கள் முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இரும்பு தடுப்புகள் போட்டு தடுத்து நிறுத்தினர். இதற்கு எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் போலீசாரை கண்டித்து, மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் எச்.ராஜா மற்றும் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வருவாய் அதிகாரி கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஊர்வலம் ஊருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து விநாயகர் சிலை மெய்யபுரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, மெய்யபுரத்தில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் எச்.ராஜா பேசுகையில், ‘‘மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்காதது அதிர்ச்சியை அளிக்கிறது. இங்கு நான் நின்று பேசுவதற்கான மேடையை போடக்கூடாது என்று திருமயம் போலீசார் பொதுமக்களை மிரட்டி உள்ளனர். என்னை எதிரியாக பார்க்கின்றார்கள்.

    நாங்கள் இதுவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தோம். தற்போது போலீசார் எதிர்க்க சொல்கின்றனர். இனி எதிர்த்து நின்று பார்ப்போம்’’ என்றார். இதனிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக எச்.ராஜா மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். #HRaja #BJP

    Next Story
    ×