search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாடத்திட்டத்தில் மரங்களின் பயன் பற்றிய கல்வியை சேர்க்க வேண்டும்- தமிழக அரசுக்கு நடிகர் விவேக் கோரிக்கை
    X

    பாடத்திட்டத்தில் மரங்களின் பயன் பற்றிய கல்வியை சேர்க்க வேண்டும்- தமிழக அரசுக்கு நடிகர் விவேக் கோரிக்கை

    பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் மரங்களின் பயன் பற்றிய கல்வியை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.#TamilNaduGovernment #Vivek
    சென்னை:

    இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நடிகர் விவேக் அளித்த பேட்டி வருமாறு:-

    பள்ளிக்கல்வித் துறை சம்பந்தப்பட்ட எனது கோரிக்கை மனுவை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். அமைச்சர் கே.சி.வீரமணி மூலம் அதை சமர்ப்பித்தேன்.

    தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. மழையில்லாத காரணத்தால் நீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 105 டிகிரிக்கும் மேல் வெயில் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மரம் நடுவது மட்டும்தான் ஒரே தீர்வாக இருக்க முடியும்.

    தற்போது அரசுக்கு ஒரு கோரிக்கையை நான் சமர்ப்பித்திருக்கிறேன். பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் மரங்கள், மரங்களின் பயன், மரங்களின் இன்றியமையாமை, புவிவெப்பமயமாதல், அதை தடுப்பதில் மரங்களின் பங்கு, புவிவெப்பமயமாதலுக்கு காரணம் என்ன? அதை எவ்வாறு தடுப்பது? போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

    அப்படி சேர்த்தால் மரங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு, சிறு வயதிலேயே உருவாகிவிடும். இதுதான் எனது கோரிக்கை. ஒவ்வொரு மாணவரும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். அதை அவர்கள் பராமரிப்பதை கண்காணித்து, அரசு சார்பில் நற்சான்றிதழ் வழங்க வேண்டும். இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் விவேக் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பெயரிலான, ‘பசுமை கலாம்’ என்ற அமைப்பின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை 2010-ம் ஆண்டில் இருந்து நட்டு வருகிறேன். எனக்கு ஒரு கோடி மரங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 30 லட்சம் மரங்களை நட்டுள்ளேன். எனது பசுமைப்பயணம் தொடர்கிறது.

    எனது கோரிக்கை என்னவென்றால், தமிழக பள்ளிக்கூட பாடத்திட்டத்தில், மரங்களின் பயன் பற்றிய கல்வி சேர்க்கப்பட்டால், அவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் புரியவரும். மரங்களை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு அரசே நற்சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduGovernment #Vivek
    Next Story
    ×