search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே ஆம்னி பஸ் - வேன் மோதி விபத்து - வியாபாரி உள்பட 3 பேர் பலி
    X

    சேலம் அருகே ஆம்னி பஸ் - வேன் மோதி விபத்து - வியாபாரி உள்பட 3 பேர் பலி

    சேலம் அருகே ஆம்னி பஸ் மீது வேன் நேருக்கு நேர் மோதியதில் வியாபாரி உள்பட 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாழப்பாடி:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 35). பன்றி வியாபாரியான இவர் உயர் ரக நாய்களையும் விற்பனை செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு உயர் ரக நாய்களை வாங்குவதற்காக அவருக்கு சொந்தமான வேனில் ஆத்தூர் பகுதிக்கு புறப்பட்டார். அந்த வேனை சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (26) என்பவர் ஓட்டினார்.

    அங்கு 3 உயர் ரக நாய்களை வாங்கிய அவர்கள் நள்ளிரவில் அங்கிருந்து மீண்டும் சேலத்திற்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3 மணியளவில் வேன் அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் மேம்பாலம் பகுதியில் வந்த போது முன்னே சென்ற காரை வேன் முந்தி சென்றது.

    அப்போது அந்த வழியாக கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் மீது வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. தொடர்ந்து வேனின் பின்னால் வந்த காரும் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆம்னி பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது.

    இதில் வேனில் இருந்த வியாபாரி கணேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். ஆம்னி பஸ்சை ஓட்டிவந்த டிரைவர் மணிமாறன் பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். வேன் டிரைவர் கார்த்திகேயனும் பலத்த காயம் அடைந்தார். பின்னால் வந்து மோதிய காரில் இருந்த ஈரோட்டை சேர்ந்த தமிழ்செல்வன் (42), ஜெயக்குமார் (32) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே அவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த கார்த்திகேயனையும், மணிமாறனையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.

    கணேசன் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். தகவலறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுது புரண்டனர்.

    விபத்தில் சிக்கிய வேனில் இருந்த 3 உயர் ரக நாய்களில் 2 நாய்கள் தப்பி ஓடி வனப்பகுதிக்குள் புகுந்தது. வேனில் சிக்கி கொண்ட மற்றொரு நாயை போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சில் வந்த பயணிகளை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் காரிப்பட்டி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews
    Next Story
    ×