search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. உள்விவகாரத்தில் மோடி தலையிடுவது நல்லதல்ல - புகழேந்தி பேட்டி
    X

    அ.தி.மு.க. உள்விவகாரத்தில் மோடி தலையிடுவது நல்லதல்ல - புகழேந்தி பேட்டி

    அ.தி.மு.க. உள்விவகாரத்தில் மோடி தலையிடுவது நல்லதல்ல என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் பெங்களூருவை சேர்ந்த புகழேந்தி கூறி உள்ளார்.
    வேலூர்:

    டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் பெங்களூருவை சேர்ந்த புகழேந்தி வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கட்சிகளிடையே ஒற்றுமையில்லை. அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் நல்லது நடக்கும். காவிரியில் தண்ணீர்விட அங்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதா இல்லாததால், எதுசெய்தாலும் தமிழ்நாட்டில் கேட்க ஆளில்லை என்ற எண்ணம் கர்நாடகா மாநில கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இங்கு மாநில உரிமைக்காக போராட யாரும் இல்லை. மணல் குவாரி பங்குபிரிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

    மணல்குவாரி பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்போது அ.தி.மு.க.வில் தர்மயுத்தம் 2-ம் பாகம் தொடங்கியிருக்கிறது. பிரதமர் மோடி சொல்வதை கேட்பதாக ஓ.பி.எஸ். வெளிப்படையாக கூறுகிறார். அவ்வாறு கூறும் பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் புறக்கணிப்பார்கள்.

    எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அ.தி.மு.க.வில் டெல்லியில் இருந்துகொண்டு மோடி பஞ்சாயத்து செய்கிறார். அவர் நல்லெண்ண அடிப்படையில் செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகிய 3 பேரையும் அழைத்து சமாதானம் பேசியிருக்கவேண்டும்.

    அப்படி செய்தால் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடும் என்பதால் அவர்கள் 2 பேரை மட்டும் அழைத்து பஞ்சாயத்து செய்திருக்கிறார். டெல்லியில் நிர்வாணத்துடன் போராடிய விவசாயிகளை பார்க்காத பிரதமர் மோடி அ.தி.மு.க.வின் உள்விவகாரத்தில் தலையிடுவது நல்லதல்ல.

    அவருடைய பஞ்சாயத்தை அரசியல் அனாதைகள் வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார்கள். பிரதமர் மோடியை, ஓ.பன்னீர்செல்வம் 3 முறை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது என்ன நடந்தது என்று அவர் விளக்கவேண்டும். அ.தி.மு.க.வை எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் டெல்லியில் அடகு வைத்துள்ளனர்.

    காமராஜர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் இருந்த இடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் 50 பேர்தான்கலந்துகொள்கிறார்கள். ஆனால் ரவுடியின் பிறந்த நாளில் அதைவிட அதிகமாக கூட்டம்கூடுகிறது. தமிழ்நாட்டின் நிலைமை அந்தஅளவுக்கு கெட்டுவிட்டது.

    ஊழல்பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்சொல்லவில்லை. அந்த அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இவர்களுக்கு பஞ்சாயத்து செய்தவர்களே, இவர்களை சிறையில் அடைக்கும் காலம் வரும்.

    கமல், ரஜினி இடையே பயங்கர போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களிடையே என்ன கொள்கையிருக்கிறது?. தமிழ்நாட்டில் 1¾ கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளனர். அவர்களுக்கு இவர்களால் என்ன செய்யமுடியும். காலா, விசுவரூபம்-2 படங்கள் வெளிவந்தபிறகுதான் இவர்கள் அரசியலில் இருப்பார்களா, இருக்கமாட்டார்களா என்பது தெரியும்.

    ஜெயலலிதாவின் இடத்தை தினகரனைத் தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது.

    ஆந்திர போலீசாரால் கைதுசெய்யப்பட்ட 372 பேரை ஜெயலலிதா மீட்டுகொண்டுவந்தார். ஆனால் தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதற்கான தகுதியில்லை. இங்குள்ள மக்களையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×