search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    119 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் சுருண்டது மும்பை: பேட்ஸ்மேன்கள் மீது ரோகித் சர்மா சாடல்
    X

    119 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் சுருண்டது மும்பை: பேட்ஸ்மேன்கள் மீது ரோகித் சர்மா சாடல்

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் தோல்வி அடைந்தது குறித்து பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒரு முறை சொதப்பி விட்டதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.#IPL2018 #MI #SRH
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 118 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த எளிய இலக்கை கூட அதுவும் சொந்த மண்ணில் எட்ட முடியாமல் மும்பை அணி 18.5 ஓவர்களில் 87 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் (34 ரன்), குணால் பாண்ட்யா (24 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் 120-க்கும் குறைவாக ரன்கள் எடுத்து இதில் வெற்றி பெற்ற 2-வது அணி ஐதராபாத் ஆகும். ஏற்கனவே 2009-ம் ஆண்டு சென்னை அணி பஞ்சாப்புக்கு எதிராக 117 ரன்களை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    5-வது தோல்விக்கு பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்த தோல்விக்காக எங்களை நாங்களே தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும். 119 ரன்கள் இலக்கு என்பதை எந்த மைதானத்தில் என்றாலும் எடுத்திருக்க வேண்டும். எங்களது பந்து வீச்சு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒரு முறை சொதப்பி விட்டனர். நான் உள்பட சில வீரர்களின் ஷாட் தேர்வு மோசமாக இருந்தது.’ என்றார். #IPL2018 #MI #SRH
    Next Story
    ×