search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத் சன்ரைசர்ஸ்"

    • இந்த சீசனில் டெல்லியில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் டெல்லி வீரர்கள் மிகுந்த உத்வேகம் அடைந்துள்ளனர்.
    • ஐ.பி.எல். போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

    டெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

    இந்த சீசனில் டெல்லியில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் டெல்லி வீரர்கள் மிகுந்த உத்வேகம் அடைந்துள்ளனர். குறிப்பாக விபத்தில் சிக்கி மீண்டு களம் திரும்பியுள்ள கேப்டன் ரிஷப் பண்டை வரவேற்க உள்ளூர் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். டெல்லி அணி இதுவரை 3 வெற்றி (சென்னை, லக்னோ, குஜராத்துக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் குஜராத்தை வெறும் 89 ரன்னில் சுருட்டி டெல்லி மெகா வெற்றி பெற்றது. முகேஷ்குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் ரிஷப் பண்ட் (2 அரைசதத்துடன் 210 ரன்), பிராசர், பிரித்வி ஷா, ஸ்டப்ஸ் பார்மில் உள்ளனர். அதே சமயம் விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் டேவிட் வார்னர் இந்த ஆட்டத்திலும் ஆடுவது சந்தேகம் தான்.

    முன்னாள் சாம்பினான ஐதராபாத் அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (மும்பை, சென்னை, பஞ்சாப், பெங்களூரு), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத்துக்கு எதிராக) 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டில் விசுவரூபம் எடுத்துள்ள ஐதராபாத் அணி மும்பைக்கு எதிராக 277 ரன்னும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு எதிராக 287 ரன்னும் குவித்து ஐ.பி.எல். கிரிக்கெட் யாரும் எட்டிராத ஸ்கோரை திரட்டி வரலாறு படைத்தது. தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம் உள்பட 235 ரன்), அபிஷேக் ஷர்மா (211 ரன்) அதிரடியில் வெளுத்து வாங்குகிறார்கள். மிடில் வரிசையில் எய்டன் மார்க்ரம், கிளாசென் (3 அரைசதத்துடன் 253 ரன்) அப்துல் சமத் கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ் (9 விக்கெட்) கட்டுக்கோப்புடன் வீசுகிறார்.

    மொத்தத்தில் இந்த மோதல் ஐதராபாத் பேட்டர்களுக்கும், டெல்லி பவுலர்களுக்கும் இடையிலான யுத்தமாக வர்ணிக்கப்படுகிறது. இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

    ஐ.பி.எல். போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் டெல்லியும், 12-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றன.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    டெல்லி: பிரித்வி ஷா, ஜேக் பிராசர் மெக்குர்க் அல்லது டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்), சுமித் குமார் அல்லது அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகேஷ்குமார், கலீல் அகமது.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர்குமார், ஜெய்தேவ் உனட்கட் அல்லது மயங்க் மார்கண்டே, டி.நடராஜன், நிதிஷ்குமார் ரெட்டி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ×